தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: புன்னக்காயலில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஆத்தூர் அருகே புன்னக்காயலில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
ஆறுமுகநேரி,
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஆத்தூர் அருகே புன்னக்காயலில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
தாமிரபரணி, கடலில் சங்கமிக்கும் இடம்தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதாலும், தென்மாவட்டங்களை ஒகி புயல் தாக்கியதாலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பொதிகை மலையில் பிறந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்கச் செய்யும் தாமிரபரணி ஆறானது ஆத்தூர் அருகே புன்னக்காயலில் கடலில் சங்கமிக்கிறது.
ஆத்தூரை அடுத்த முக்காணியில் இருந்து தாமிரபரணி ஆறானது 6 கிளைகளாக பிரிந்து புன்னக்காயலில் கடலில் சேர்கிறது. இதில் புன்னக்காயல் தென்புறம் மீன்பிடி துறைமுகம் அருகிலும், வடபுறம் புனித தோமையார் ஆலயம் அருகிலும் பிரதான கிளைகள் செல்கிறது. இவற்றின் நடுவில் 4 கிளைகளாக செல்லும் தாமிபரணி ஆறானது, கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், மணல்மேடாகி தூர்ந்து விட்டது.
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததுதற்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும், புன்னக்காயலில் 6 கிளைகளில் 2 பிரதான கிளைகளில் மட்டுமே தண்ணீர் செல்வதாலும், நேற்று முன்தினம் இரவில் புன்னக்காயலில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. புன்னக்காயல் 60 வீடு தெரு, 100 வீடு தெரு, மறக்குடி தெரு, தெற்கு தெரு, அந்தோணியார் கோவில் பகுதி, சவேரியார் கோவில் பகுதி உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் 30–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அங்குள்ள வளனார் மேல்நிலைப் பள்ளிக்கூடம், திருமண மண்டபம் ஆகிய இடங்களில் தங்க வைத்தனர். அவர்களுக்கு ஊர் கமிட்டியினர் உணவு வழங்கினர். இதையடுத்து திருச்செந்தூர் தாசில்தார் அழகர், ஆழ்வார்திருநகரி யூனியன் ஆணையாளர் பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டனர்.
ஓடையை தூர்வார...இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், புன்னக்காயல் புனித சவேரியார் ஆலயத்துக்கு கீழ்புறம் உள்ள ஓடை தூர்ந்து விட்டது. அந்த ஓடையை தூர்வாரி, வெள்ளநீரை கடலுக்கு அனுப்ப வேண்டும். புன்னக்காயலில் தூர்ந்து போன தாமிரபரணி ஆற்றின் 4 கிளைகளையும் தூர்வார வேண்டும் என்று தெரிவித்தனர்.