நெல்லை மாவட்டத்தில் மழை குறைவு பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது


நெல்லை மாவட்டத்தில் மழை குறைவு பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது
x
தினத்தந்தி 3 Dec 2017 2:15 AM IST (Updated: 2 Dec 2017 7:56 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் மழை குறைந்து விட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்து வருகிறது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் மழை குறைந்து விட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்து வருகிறது. இருந்தாலும் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

கனமழை

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. அதுவும் கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணைகளின் நீர்மட்டம் அதிகரித்தது.

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் ஒரே நாளில் 20 அடி வரை உயர்ந்தது. அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் அணைக்கு வந்த தண்ணீரில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீரை தாமிரபரணி ஆற்றில் திறந்து விட்டனர். இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி, பாபநாசம் தலையணை, கீழ் அணை தெரியாத வண்ணம் வெள்ளம் ஆற்றில் ஓடியது. சேரன்மாதேவி ஆற்றுப்பாலம், கருப்பந்துறை ஆற்றுபாலம் ஆகியவற்றை மூழ்கடித்து சென்றது.

நெல்லை திடீயூர் அருகே பச்சையாற்றில் ஏற்பட்ட வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்தது. தருவை ஆற்றுபாலத்தை மூழ்கடித்து வந்த வெள்ளம் வெள்ளநீர்கால்வாய் வழியாக வீணாக சென்றது.

குறுக்குத்துறை கோவில்

நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவிலை வெள்ளம் சூழ்ந்து சென்றது. தைபூசமண்டபம், சுடலைமாடசாமி கோவில்கள், மற்றும் ஆற்றில் உள்ள அனைத்து மண்டபங்களையும் வெள்ளம் மூழ்கடித்து சென்றது. தாமிரபரணி ஆற்று வெள்ளத்துடன், குற்றாலம் பகுதியில் பெய்து வந்த தொடர்மழையால் சிற்றாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாமிரபரணி ஆற்றில் சீவலப்பேரி அருகே கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சீவலப்பேரி ஆற்றுபாலத்தை தொட்டப்படி வெள்ளம் ஓடியது. இந்த வெள்ளம் ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி வீணாக கடலுக்கு செல்கிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து நெல்லை மாவட்டத்தில் மழை ஓரளவு குறைந்துவிட்டது. சில இடங்களில் மட்டுமே மழை பெய்தது. அந்த மழையும் சாரல் மழைபோல் தூறிக்கொண்டு தான் இருந்தது.

வெள்ளம் குறைந்தது

இதனால் காற்றாற்று வெள்ளம் தாமிரபரணில் கலப்பது குறைந்தது. மேலும் பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 12 ஆயிரம் கண அடி தண்ணீரும் நிறுத்தப்பட்டது. சேர்வலாறு அணைப்பகுதியில் இருந்து வெளியேறிய 10 ஆயிரம் கன அடி தண்ணீரும் நிறுத்தப்பட்டது. பாபநாசம் அணையில் இருந்து வெளியேறுகின்ற உபரி நீரான 1659 கன அடி தண்ணீர் மட்டும் ஆற்றில் விடப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்து விட்டது.

குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வடபுறத்தில் இருந்து கோவிலுக்கு செல்கின்ற பாலத்தில் செல்லமுடியாத அளவிற்கு தண்ணீர் சென்றது. தற்போது அங்கு வெள்ளம் குறைந்து கோவிலுக்கு செல்கின்ற பாலத்திற்கு கீழே தான் வெள்ளம் செல்கிறது. வெள்ளத்தில் மூழ்கடித்து சென்ற மண்டபங்கள் வெளியே தெரிகின்ற அளவிற்கும், ஓத்தபனை சுடலைமாடசாமி கோவில் சிலைகள் வெளியே தெரிகின்ற அளவிற்கு 4 அடிக்கு மேல் வெள்ளம் குறைந்து செல்கிறது. இருந்தாலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் சென்றுகொண்டு தான் இருக்கிறது. இந்த தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

நீர்மட்டம் உயர்வு

நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்து வந்த மழை குறைந்தாலும் அணைப்பகுதியில் தொடர்ந்து குறைந்த அளவிற்காவது மழை பெய்து வருகிறது. பாபாசம் அணைப்பகுதியில் நேற்று காலை வரை 37 மில்லி மீட்டா மழை பெய்து உள்ளது. இதனால் நேற்று முன்தினம் 131.10 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 4.35 அடி உயர்ந்து 134.45 அடியாக அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 976 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் 1659 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டது. சேர்வலாறு அணைப்பகுதியில் 41 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 147.57 அடியாக உள்ளது.

இதேபோன்று மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 104.25 அடியாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 3.07 அடி உயர்ந்து 107.32 அடியாக உள்ளது. அணைப்பகுதியில் 61 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணைக்கு 3 ஆயிரத்து 330 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. அணைப்பகுதியில் பெய்து வருகிற மழையால் மணிமுத்தாறு அருவியில் 3–வது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளது.

ராமநதி அணையின் நீர்மட்டம் 83 அடியாக உள்ளது. மேலும் அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் அணைக்கு வருகின்ற 446 கன அடி தண்ணீர் அப்படியே மறுகால் வழியாக வெளியேற்றப்படுகிறது.

இதேபோல் கடனாநதி அணைக்கு வருகின்ற 845 அடி தண்ணீரும், கருப்பநதிக்கு வருகின்ற 500 கன அடி தண்ணீரும், குண்டாறுக்கு வருகின்ற 189.13 கன அடி தண்ணீரும், நம்பியாறுக்கு வருகின்ற 1460 கன அடிதண்ணீரும், கொடுமுடியாறு அணைக்கு வருகின்ற 1250 கன அடி தண்ணீரும் அப்படியே அணையில் இருந்து திறந்து விடப்படுகிறது.

வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 38 அடியாக இருந்தது. இருந்தது. நேற்று காலை நிலவரப்படி 3.75 அடி உயர்ந்து அணையின் நீர்மட்டம் 41.75 அடியானது. அணைக்கு 345 கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 105 அடியாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்து 111 அடியானது. அணைக்கு 207 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மரம் விழுந்தது

நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ஒரு வேப்பமரம் சாய்ந்து அருகில் உள்ள இ–சேவை மையத்திலும், மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகத்தின் மேலும் விழுந்துவிட்டது. இந்த மரம் விழுந்ததில் இ–சேவை மையத்தின் கூரை சேதம் அடைந்தது. இந்த மரத்தை தீயணைப்பு படைவீரர்களும், அலுவலக ஊழியர்களும் அறுத்து அப்புறப்படுத்தினார்கள். இந்த மரம் நேற்று அதிகாலையில் மக்கள் யாரும் இல்லாத நேரத்தில் சாய்ந்ததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதேபோல் நெல்லை பழைய பேட்டையில் ஒரு வாகைமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதையும் தீயணைப்பு படையினர் அறுத்து அப்புறப்படுத்தினார்கள்.

மழை விவரம்

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையின் அளவு(மில்லி மீட்டரில்) வருமாறு:–

மணிமுத்தாறு–61, குண்டாறு–45, சேர்வலாறு–41, பாபநாசம்–37, கொடுமுடியாறு–32, செங்கோட்டை–31, பாளையங்கோட்டை–25, ராதாபுரம்–22, கடனாநதி–18, நெல்லை–15, அடவிநயினார் அணை–14, சேரன்மாதேவி–13.20, சங்கரன்கோவில்–12, நாங்குநேரி–11, அம்பை–9.20, ஆய்குடி8.60, தென்காசி–8.20, ராமநதி–8, கருப்பாநதி–8, சிவகிரி–5


Next Story