ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதிக்கக்கூடாது

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்று கோவையில் தொல்.திருமாவளவன் கூறினார்.
கோவை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் கோவை வந்தார். பின்னர் அவர் தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் தம்பி வீட்டுக்கு சென்று அவருடைய மகள் வித்யா இறந்ததற்கு துக்கம் விசாரித்தார். முன்னதாக கோவை விமான நிலையத்தில் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
‘ஒகி‘ புயல் காரணமாக ஏற்பட்ட மழையால் கன்னியாகுமரி மாவட்டம் தத்தளித்து வருவது வேதனை அளிக்கிறது. தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து அங்குள்ள மக்களுக்கு உணவு, உடை, தங்கும் இடத்தை வழங்குவதில் வேகம் காட்ட வேண்டும். வருகிற 7–ந் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே தமிழக அரசு போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேலும், அமைச்சர்களும் தங்களது சொந்த தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை செய்ய வேண்டும்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றிக்காக 7–ந் தேதி கூட்டணி கட்சிகளின் பிரசார கூட்டம் நடக்கிறது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும். ஏற்கனவே பணப்பட்டுவாடா அதிகமாக செய்ததால்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதை தடுக்கும் வகையில் தற்போது மாலை 5 மணிக்கு மேல் வீடுவீடாக சென்று பிரசாரம் செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பகலிலும் இந்த கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும். வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கும்போதுதான் பணப்பட்டுவாடா செய்ய வழிவகுக்கும். எனவே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பதற்கு அனுமதி அளிக்கக்கூடாது.
கடலோர மாவட்டமான திருமுட்டம் சாத்தாவட்டத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவர் தீக்குளித்தார். ஆனால் வேண்டும் என்றே இல்லாத குற்றச்சாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது கூறி அரசியல் ஆதாயம் தேடுவதை கடமையாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்து வருகிறார்.
எனவே சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வரும் டாக்டர் ராமதாஸ் மீது வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக விரைவில் அவர் மீது கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர உள்ளேன்.
கோவையில் விபத்தில் இறந்த என்ஜினீயர் ரகுபதியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதுடன், அ.தி.மு.க. சார்பிலும் இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன் அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.