மாவட்டத்தில் கனமழை: 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின


மாவட்டத்தில் கனமழை: 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
x
தினத்தந்தி 3 Dec 2017 4:00 AM IST (Updated: 3 Dec 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடலூர்,

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று கடந்த வியாழக்கிழமை புயல் சின்னமாக மாறியது. ஒகி என்று பெயரிடப்பட்ட இந்த புயல் காரணமாக தென்மாவட்டங்களில் கன மழை பெய்தது.

கடலூர் மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கன மழையாக கொட்டித்தீர்த்தது.

கனமழை காரணமாக விருத்தாசலம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில், நெல்லிக்குப்பம், பெண்ணாடம் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 15 ஆயிரம் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. சம்பா சாகுபடி தொடங்கிய ஒரு மாதத்திலேயே தங்கள் பயிர் மழைநீரில் மூழ்கியதை பார்த்து விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், கடந்த ஆண்டு பருவமழை இல்லாமல் கடும் வறட்சி நிலவியது. இதனால் நெற்பயிர் சாகுபடி செய்ய முடியாமல் போனது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் நல்ல மழை பெய்ய தொடங்கியதால் சம்பா சாகுபடிக்கு இதமான சூழ்நிலை உருவானது. கடன் வாங்கி நெற்பயிரை சாகுபடி செய்தோம். ஆனால் தொடர்ந்த பெய்த கன மழையினால் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பது வேதனையாக இருக்கிறது. மழைநீர் வடியாவிட்டால் பயிர்கள் அழுகி சேதம் அடைந்து விடும் என வருத்தத்துடன் தெரிவித்தார்.

வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை சம்பா சாகுபடி தொடங்கி ஒரு மாதம் முதல் 1½ மாதம் ஆகிறது. நாற்று சுமார் 2 அடி உயரத்துக்கு மேல் வளர்ந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் குமராட்சி, காட்டுமன்னார் கோவில் தாலுகாக்களில் 12 ஆயிரத்து 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருக்கிறது. விருத்தாசலம், நெல்லிக்குப்பம் பகுதியில் சாகுபடி செய்திருந்த 2 ஆயிரத்து 500 ஏக்கர் நெற்பயிர்களும் தண்ணீரில் மூழ்கி உள்ளன. நெற்பயிர்கள் ஒருவார காலத்துக்கு தண்ணீரை தாக்கு பிடிக்கும். அதற்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றால் பயிர் அழுகி சேதம் அடைந்து விடும். எனவே விவசாயிகள், விளைநிலங்களில் உள்ள தண்ணீரை வடியவைக்க வேண்டும் என்றார்.


Next Story