கடலூர் மாவட்டத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 5 இடங்களில் தரைப்பாலம் மூழ்கின


கடலூர் மாவட்டத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 5 இடங்களில் தரைப்பாலம் மூழ்கின
x
தினத்தந்தி 2 Dec 2017 10:30 PM GMT (Updated: 2 Dec 2017 6:55 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 5 இடங்களில் தரைப்பாலம் மூழ்கியதால் 77 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லிக்குப்பம்,

ஒகி புயலால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகள், ஏரிகள், குளங்களுக்கு அதிகளவு தண்ணீர் வந்தது. இதனால் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை மதகு உடைந்ததாலும், சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இருகரைகளையும் தொட்டபடி வந்த இந்த வெள்ளம் பல பாதிப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:–

தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள அழகியநத்தத்தில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தது. இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அழகியநத்தம், மணமேடு, கிருஷ்ணாபுரம், இரண்டாயிரம் வளாகம், கலையூர், நத்தம் உள்பட 15 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் மருதாடு தரைப்பாலத்தையும் தென்பெண்ணையாற்று வெள்ளம் மூழ்கடித்தது. இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் குருவிநத்தம், தூக்குப்பாலம், திருப்பணாம்பாக்கம், பாகூர் உள்பட 7 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் உள்ள மணிமுக்தா அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர்மட்டம் உயர்ந்ததால், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் மணிமுக்தாற்றில் திறந்து விடப்பட்டது. அதுமட்டுமின்றி பல இடங்களில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளமும் மணிமுக்தாற்றில் வந்து கலந்தது. இதனால் விருத்தாசலத்தில் உள்ள மணிமுக்தாற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மணிமுக்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பரவளூர்–கலரங்குப்பம் இடையே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தது. நேரம் செல்ல செல்ல ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் தரைப்பாலம் முழுமையாக அடித்துச்செல்லப்பட்டது.

இதனால் பரவளூரில் இருந்து கலரங்குப்பம், அண்ணாநகர், எருக்கன்குப்பம், ராமநாஸ் நகர், சிவனார்குப்பம், தொட்டிக்குப்பம், ரெட்டிக்குப்பம், பட்டி பரூர் உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மன்னம்பாடி பெரிய ஏரி நிரம்பியது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி மதகு வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அங்குள்ள ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மன்னம்பாடி–விளாங்காட்டூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் திருமங்கலம், கோவிலூர், மதுரவள்ளி, அகரம் உள்ளிட்ட 20 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் மன்னம்பாடி அருகே உப்பு ஓடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மன்னம்பாடி–எடையூர் இடையே செல்லும் தரைப்பாலம் மூழ்கியது. இதன் காரணமாக விருத்தாசலத்தில் இருந்து விளாங்காட்டூர், மன்னம்பாடி, கோவிலூர், நிதி நத்தம் செல்லும் அரசு பஸ்களும் தற்காலிகமாக நேற்று இயக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள 15 கிராமங்களை சேர்ந்தவர்கள் பெண்ணாடம், வேப்பூர் வழியாக 25 கிலோ மீட்டர் சுற்றி விருத்தாசலத்திற்கு வரவேண்டும் என்கிற நிலையில் இருக்கின்றனர்.


Next Story