ஜாக்டோ, ஜியோ அமைப்புகள் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் 10–ந்தேதி உண்ணாவிரத போராட்டம்
ஜாக்டோ, ஜியோ அமைப்புகள் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வருகிற 10–ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் கூறினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட ஜாக்டோ, ஜியோ மற்றும் கிராப் கூட்டமைப்பின் சார்பில், உறுப்பினர்களுக்கான கோரிக்கை விளக்க கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. இதில், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப்பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜா, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்க பொருளாளர் வெங்கடேசலு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதைத்தொடர்ந்து, ஜாக்டோ, ஜியோ, கிராப் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளருமான வின்சென்ட்பால்ராஜ் சிறப்புரை வழங்கினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும். 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் அறிவித்தது போல, தமிழக அரசு ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்ற கோரிக்கைகளை தொடர்ந்து வலியுத்தி வருகிறோம்.
இவற்றை நிறைவேற்றக்கோரி போராட்டங்கள் நடத்த இருக்கிறோம். அதன்படி, அடுத்த மாதம் (ஜனவரி) 6–ந்தேதி மாநில அளவில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். முன்னதாக, வருகிற 10–ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்ட ஜாக்டோ, ஜியோ, கிராப் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல்லில் உண்ணாவிரதம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.