திருச்சியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 20 பவுன் நகைகளை திருடிய 3 பேர் கைது


திருச்சியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 20 பவுன் நகைகளை திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 Dec 2017 3:15 AM IST (Updated: 3 Dec 2017 1:19 AM IST)
t-max-icont-min-icon

முகநூலில் நண்பர் போல பழகி தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 20 பவுன் நகைகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி உய்யகொண்டான்திருமலை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராம்பிரசாத்(வயது 37). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரேணுகாராணி. இவருக்கு, முகநூல்(பேஸ்புக்) மூலம் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த கார்த்திக்(30) என்பவர் அறிமுகமானார். இந்த பழக்கத்தின் மூலம் கார்த்திக் நெருங்கிய நண்பரானார். நேற்று முன்தினம் கார்த்திக் சென்னையில் இருந்து திருச்சியில் உள்ள ராம்பிரசாத்தின் வீட்டுக்கு வந்தார். அந்தசமயம் அவர் வேலைக்கு சென்று விட்டதால் ரேணுகாராணியிடம் பேசி கொண்டு இருந்தார்.

அப்போது ரேணுகாராணி, குடிப்பதற்கு குளிர்பானம் வாங்க அருகே உள்ள கடைக்கு சென்றார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட கார்த்திக், வீட்டின் பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகளை திருடி, அங்கு வந்த தனது கூட்டாளிகள் 2 பேரிடம் கொடுத்து அனுப்பி விட்டார். அதன்பிறகு அங்கு வந்த ரேணுகாராணியிடம் பேசி விட்டு ஒன்றும் தெரியாதது போல் அங்கிருந்து சென்று விட்டார். சிறிதுநேரம் கழித்து ரேணுகாராணி பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த நகைகள் திருட்டுபோய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து ராம்பிரசாத்துக்கு தகவல் கொடுத்தார். அவர் வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு அரசு மருத்துவமனை போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் கார்த்திக் அங்கு வந்து சென்றது தெரிய வந்தது. உடனே அவரை தேடினார்கள். அப்போது அவர் மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து விசாரித்தபோது, ராம்பிரசாத் வீட்டில் நகைகளை திருடியதை ஒப்பு கொண்டார். மேலும், இதற்கு உடந்தையாக அவரது கூட்டாளிகளான சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த அருண், அரவிந்தன் ஆகியோர் இருந்தது தெரியவந்தது.

பின்னர் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 20 பவுன் நகைகளையும் மீட்டனர். அவர்களில் கார்த்திக் சட்டம் பயின்றுள்ளார் என்பதும், அவரது கூட்டாளிகளான அருண், அரவிந்தன் ஆகியோர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கார்த்திக் திருடி சென்ற 20 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்வதற்காக மத்திய பஸ் நிலையம் அருகே அவர் தங்கி இருந்த விடுதி அறைக்கு போலீசார் சென்றனர். அந்த அறையில் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கைக்கடிகாரங்களும், பரிசு பொருட்களும் இருந்தன. அதுபற்றி போலீசார் விசாரித்தபோது, அவற்றை நண்பர்கள் சிலர் தனக்கு பரிசாக வழங்கியதாக அவர் போலீசாரிடம் கூறினார். இவர் முகநூல் மூலம் தன்னிடம் அறிமுகமாகும் பெண்களிடம் நன்றாக பழகி, பின்னர் அவர்களை நேரில் சந்தித்து பரிசு பொருட்களை வழங்கி தொடர்ச்சியாக இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story