மதுசூதனன் –தினகரன் வேட்பு மனுவை தேர்தல் கமி‌ஷன் தள்ளுபடி செய்ய வேண்டும்; ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்


மதுசூதனன் –தினகரன் வேட்பு மனுவை தேர்தல் கமி‌ஷன் தள்ளுபடி செய்ய வேண்டும்; ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
x
தினத்தந்தி 3 Dec 2017 4:45 AM IST (Updated: 3 Dec 2017 1:33 AM IST)
t-max-icont-min-icon

மதுசூதனன் –தினகரன் வேட்பு மனுவை தேர்தல் கமி‌ஷன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.

ஈரோடு,

திராவிடர் கழகம் சார்பில் ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:–

பெரியார் 95 வயது வரை வாழ்ந்து சாதித்தார் என்றால் அதற்கு காரணம் ஆசிரியரும், (வீரமணி) மணியம்மையும் தான். பெரியாரின் தந்தை மூலமாக வந்த சொத்தை அவர் தொடவே இல்லை. அதை அப்படியே வைத்திருந்தார். பெரியார் வைத்திருந்தார் என்பது பெரிய வி‌ஷயம் அல்ல. வீரமணியும், மணியம்மையும் வைத்திருந்தது தான் பெரிய வி‌ஷயம். அதைவிட மிகப்பெரிய வி‌ஷயம் என்னவென்றால் அந்த சொத்துகளை எல்லாம் அப்படியே எங்களிடம் ஒப்படைத்தது தான்.

ஆசிரியர் நினைத்திருந்தால் அந்த சொத்துகளை என்ன வேண்டும் என்றாலும் செய்திருக்கலாம். ஆனால் அவர் அந்த சொத்துகளை எங்களிடம் ஒப்படைத்து மட்டுமல்லாமல் அதற்கான பத்திரங்களையும் எங்களிடம் தந்தார்கள். நான் அதை குப்பை மூட்டை என்று நினைத்து வீட்டின் மூலையில் போட்டு விட்டேன்.

அதன் பின்னர் ஒரு இடத்தை விற்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போது அதற்கு மூல பத்திரம் வேண்டும் என்று கூறினார்கள். அதன் பின்னர் தான் நான் அந்த மூட்டையை திறந்து பார்த்தேன். அப்போது அந்த மூட்டையில் அனைத்து பத்திரங்களும் இருந்தது. 110 ஆண்டுகளுக்கு முன்பாக வாங்கப்பட்ட சொத்துகளின் பத்திரங்கள் கூட அதிலே தனித்தனியாக இருந்தது. அப்படிப்பட்ட ஆசிரியரை நான் எப்படி மறக்க முடியும்.

கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் வினியோகம் செய்ததால் தான் தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மதுசூதனன், டி.டி.வி.தினகரன் ஆகியோரை தேர்தலில் போட்டியிட எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. எனவே மதுசூதனின் வேட்பு மனுவையும், டி.டி.வி.தினகரனின் வேட்பு மனுவையும், தேர்தல் கமி‌ஷன் தள்ளுபடி செய்ய வேண்டும். குஜராத்திலும், இமாச்சலபிரதேசத்திலும் மிகப்பெரிய அடியை பொதுமக்கள் மோடிக்கு தரப்போகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story