சித்தோடு மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட தரமில்லாத 3 ஆயிரத்து 800 கிலோ வெல்லம் பறிமுதல்


சித்தோடு மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட தரமில்லாத 3 ஆயிரத்து 800 கிலோ வெல்லம் பறிமுதல்
x
தினத்தந்தி 3 Dec 2017 4:15 AM IST (Updated: 3 Dec 2017 1:33 AM IST)
t-max-icont-min-icon

சித்தோடு மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட தரமில்லாத 3 ஆயிரத்து 800 கிலோ வெல்லத்தை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஈரோடு,

ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் தனியார் வெல்ல மார்க்கெட்டு 3 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை வெல்லம் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வெல்ல உற்பத்தியாளர்கள் விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

இந்த வெல்லத்தை வெளி மாநிலங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் ஏலம் எடுத்து செல்கிறார்கள். இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் வெல்லத்தில் அதிக அளவில் ரசாயனம் கலக்கப்பட்டு தரமற்று இருப்பதாக மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகருக்கு புகார் வந்தது. அதைத்தொடர்ந்து அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழு சித்தோடு பகுதியில் செயல்பட்டு வரும் வெல்ல மார்க்கெட்டுகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அதிக அளவில் ரசாயனம் கலந்து தரமற்ற வெல்லம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 127 மூட்டைகளில் இருந்த 3 ஆயிரத்து 800 கிலோ வெல்லத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி கலைவாணி கூறும்போது, ‘சித்தோடு பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த தரமற்ற 3 ஆயிரத்து 800 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வெல்லத்தில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு தர பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவின் அடிப்படையில் மேற்கண்ட வெல்லம் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடையின் உரிமையாளர்களிடம் 15 நாட்களுக்குள் முறையாக உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆய்வு இனி அடிக்கடி நடைபெறும்’ என்றார்.

இந்த ஆய்வின்போது அவருடன் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பூபாலன், முத்துக்கிருஷ்ணன், முருகன், மணி, எட்டிக்கண், எழில் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story