தேசிவாத காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் கைது
பெண்ணிடம் மிரட்டி பணம் பறிக்க முயன்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
தானே,
தானே, கல்வா பகுதியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் சிவாய். இவர் மீது பெண் ஒருவர் கல்வா போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.இதில் அவர் கூறியிருப்பதாவது:–
கல்வா பகுதியில் நான் புதிதாக கட்டிடம் ஒன்றை கட்டி வருகிறேன். இந்த நிலையில் சம்பவத்தன்று நான் கவுன்சிலர் சிவாய் தனது ஆதாரவாளர்களுடன் என் கட்டிடப்பணி நடக்கும் இடத்திற்கு வந்தார். அவர் என்னிடம் அங்கு தொடர்ந்து கட்டிடம் கட்டவேண்டும் எனில் தனக்கு பணம் தரவேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து பணியை தொடர விடமாட்டேன்.
மேலும் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தையும் இடித்து தரைமட்டமாக்குவேன் என மிரட்டினார். ஆனால் அவரின் மிரட்டலுக்கு நான் அடிபணிய மறுத்துவிட்டேன். என் சொந்த நிலத்தில் கட்டிடம் கட்ட பணம் தரமாட்டேன் என மறுத்துவிட்டேன்.
இதனால் ஆத்திரமடைந்த சிவாயும் அவரது ஆதரவாளர்களும் என்னிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் கட்டிடத்தை இடிக்க முயற்சி செய்தனர். என் கட்டிடத்தில் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்ட கவுன்சிலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.
இவர் கொடுத்த புகாரின் பேரில் சிவாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள சிவாய் கால்வா வார்டு கிமிட்டி தலைவராகவும் பதிவு வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் கொடுத்த புகாரின் பேரில் கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.