காங்கிரஸ் கட்சி சார்பில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு


காங்கிரஸ் கட்சி சார்பில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு
x
தினத்தந்தி 3 Dec 2017 4:37 AM IST (Updated: 3 Dec 2017 4:36 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சி சார்பில், குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று மாநில தலைவர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர், காங்கிரஸ் கட்சி பற்றி தவறான கருத்துகளை தெரிவித்துள்ளார். காங்கிரஸ், ஒரு குடும்பத்தின் கட்சி என்று கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சியில் நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட்டு, அதன்மூலமாகவே தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு, ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கமிட்டியில் இருந்தும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையிலேயே தலைவர் தேர்வு நடைபெறுகிறது. இதில், எந்த ஒளிவு மறைவும் இருப்பது கிடையாது.அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி போட்டியிடுகிறார். அவருக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுல்காந்தி தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்ய இருப்பதால், நானும், முதல்–மந்திரி சித்தராமையாவும் டெல்லி செல்ல இருக்கிறோம். காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு குடும்பத்தில் ஒருவர் தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் தேர்தலில் போட்டியிட ஒரு குடும்பத்தில் ஒருவருக்கே வாய்ப்பளிக்கப்படும். தேவைப்பட்டால் கட்சி மேலிட தலைவர்கள் இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பார்கள்.

காங்கிரஸ் கட்சி சார்பில் தொடங்கப்பட்ட வீட்டுக்கு, வீடு காங்கிரஸ் திட்டம் தோல்வி அடைந்து விட்டதாக கூறுவது தவறானது. அதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. பா.ஜனதா கட்சியை பார்த்து காங்கிரஸ், தேர்தல் பிரசார வியூகங்களை அமைக்க வேண்டிய அவசியமில்லை. சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோருக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்று குமாரசாமி கூறி இருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் தான் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோரின் வாழ்க்கை உயர்ந்துள்ளது. அவர்களது கல்வி அறிவு அதிகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சி எப்போதும் சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டோரின் நலனுக்காக உழைத்து வருகிறது.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.


Next Story