‘ஜெயலலிதாவின் சொத்துக்காக மகள் என்று அம்ருதா நாடகமாடுகிறார்’ நடிகை லதா பேட்டி


‘ஜெயலலிதாவின் சொத்துக்காக மகள் என்று அம்ருதா நாடகமாடுகிறார்’ நடிகை லதா பேட்டி
x
தினத்தந்தி 4 Dec 2017 4:30 AM IST (Updated: 4 Dec 2017 12:34 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவின் மகள் என்பதனை ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது அம்ருதா ஏன் சொல்லவில்லை. ஜெயலலிதாவின் சொத்துகளை அடைய அம்ருதா நாடகமாடுகிறார் என்று நடிகை லதா கூறினார்.

மதுரை,

மதுரையில் நடிகை லதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சினிமாவில் என்னை அறிமுகப்படுத்தியது எம்.ஜி.ஆர். தான். எனது முதல் படமான உலகம் சுற்றும் வாலிபனில் அவருடன் நடித்தேன். அதே போல் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனிலும் நான்தான் நடித்தேன். எம்.ஜி.ஆர். என்னை கட்சியில் இணைத்து உறுப்பினராக்கினார். அ.தி.மு.க.வில் 3–வது பெண் உறுப்பினராக நான் சேர்ந்தேன். கட்சியின் வளர்ச்சிக்காக மதுரை, கோவை உள்பட பல்வேறு இடங்களில் நாட்டிய நாடகம் நடத்தினேன்.

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு கட்சியில் சசிகலா குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்த முயன்றனர். ஆனால் அது முறியடிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தற்போது இணைந்துள்ளனர். இந்த ஆட்சி 5 ஆண்டு காலம் நீடிக்கும். ஏற்கனவே நான் ஆர்.கே.நகர் தேர்தலில் மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். தற்போது கட்சி அழைத்தால் மீண்டும் பிரசாரம் செய்வேன். விஷால் மட்டுமல்ல அரசியலுக்கு யார் வந்தாலும் வரவேற்கிறேன்.

ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பதாக கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இதனை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது இந்த கேள்விகள் ஏன் எழுப்பப்படவில்லை. ஜெயலலிதா தைரியமானவர். உண்மையில் அவருக்கு மகள் இருந்திருந்தால், அதனை தைரியமாக சொல்லி இருப்பார். மறைக்க மாட்டார். தற்போது அம்ருதா ஜெயலலிதாவின் மகள் என்று கூறி அவருடைய சொத்துகளை அடைய ஆசைப்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story