ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுவதால் தி.மு.க.வின் வெற்றி பிரகாசமாக உள்ளது தொல்.திருமாவளவன் பேட்டி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுவதால் தி.மு.க.வின் வெற்றி பிரகாசமாக உள்ளது என்று ஈரோட்டில் தொல்.திருமாவளவன் கூறினார்.
ஈரோடு,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் மழை வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. 1,000–க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள் என்று மீனவ சமுதாயத்தினர் அறிவித்து உள்ளனர். இந்திய அரசு கப்பல் மூலம் காணாமல் போனவர்களை தேடி வருகிறது என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறார். ஏராளமான படகுகள் சேதம் அடைந்துள்ளதால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் காணமால் போன மீனவர்களை தேடி கண்டுபிடிப்பதற்கு துணை ராணுவத்தின் குழுவினரை உடனடியாக கலத்தில் இறக்க வேண்டும். மீனவர்களை தேடுவதற்காக இன்னும் கூடுதலாக கப்பல்களை இயக்க வேண்டும். இலங்கை கடற்கறை ஓரங்களில் மீனவர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன என்று தகவல்கள் கூறுகின்றன. எனவே எத்தனை மீனவர்கள் காணமல் போய் உள்ளனர், எத்தனை பேர் இறந்துள்ளனர், எத்தனை பேர் திரும்பி வந்திருக்கிறார்கள் என்ற எந்த விவரமும் அறிவிக்கப்படாததால் மீனவர் சமுதாயம் மிகுந்த பதற்றத்தில் உள்ளது.
சுசீந்திரம் அருகே உள்ள கோசாலைக்குள் வெள்ளம் புகுந்து 30 மாடுகள் இறந்துள்ளது. இதன் மூலம் எந்த அளவுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து இருக்கிறது என்பதை அரிய முடிகிறது.
எனவே மக்களை காப்பாற்ற உணவு, உடை போன்ற உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
ஈரோடு மாநகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பெருந்துறை சிப்காட் பகுதியில் தாட்கோ மூலம் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வணிக வளாகங்கள் பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது. எனவே அதை உரியவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வருகிற 7–ந் தேதிக்கு பின்னர் பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறோம்.
தற்போதைய நிலவரப்படி தேர்தல் நேர்மையாக நடத்தால் தி.மு.க. வெற்றி பெறும். தேர்தல் ஆணையம் தமிழகத்தில் ஒரே ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிற காரணத்தால் தாராளமாக இதற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். பணப்பட்டுவாடா புழக்கம் நடைபெறாத வகையில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முன்வரவேண்டும்.
நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது அவருடைய அரசியலுக்கு அச்சாரமாக இருக்கும். அவரால் வாக்குகளை பிரிக்க முடியும் என்பதால் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கடலூரில் வாலிபர் ஆனந்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது பொய்யான பிரசாரம் செய்து பழி போட்டு உள்ளனர். ஆனால் போலீசார் விசாரணையில் வாலிபர் ஆனந்த் தற்கொலை செய்து உள்ளதாக கூறி உள்ளனர். தி.மு.க.வுக்கு நாங்கள் ஆதரவு அளித்திருப்பதை ராமதாசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கே தி.மு.க. வெற்றிபெற்று வரும் காலத்தில் மு.க.ஸ்டாலின் முதல் –அமைச்சர் ஆகிவிடுவாரோ? என்ற வயிற்றெரிச்சலில் அவர் கூறி உள்ளார்.
மாட்டு இறைச்சி தடைச்சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.