பேரணாம்பட்டு போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி செயலாளர் கைது
பேரணாம்பட்டு ஆயக்காரவீதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி சாந்தி.
பேரணாம்பட்டு,
பேரணாம்பட்டு ஆயக்காரவீதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி சாந்தி (வயது 48). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி செயலாளர். மணிக்கும், அவரது அண்ணன் பழனிக்கும் இடையே சொத்து தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டு, இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் பழனின் மகன்களுக்கு அதே தெருவை சேர்ந்த ஆதிமூலம் மகன் தயாளன் (வயது 26) என்பவர் நண்பர் ஆவார்.
நேற்று மாலை சாந்தி, தயாளன் வீட்டிற்கு எதிரே உள்ள கடையில் இருந்தபோது, தயாளன் தனது வீட்டு மாடியில் இருந்து சாந்தியை முறைத்து பார்த்ததாகவும், இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சாந்தி பேரணாம்பட்டு போலீஸ் நிலையம் முன்பு, தான் ஏற்கனவே கொடுத்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த போலீசார் சாந்தி மீது தண்ணீரை ஊற்றினர்.
இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாசாமி, சாந்தி மீது வழக்குப்பதிவு செய்து, அவரையும், தயாளனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.