அவினாசியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் பாலத்தில் இருந்து வாய்க்காலுக்குள் பாய்ந்தது; 2 பேர் பலி
அவினாசியில் நடந்த பயங்கர விபத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் நிலைதடுமாறி ஓடி பாலத்தில் இருந்து வாய்க்காலுக்குள் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அவினாசி,
அந்த பஸ் அவினாசி ஆட்டையாம்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள மயிலம்மன் கோவில் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரை கடந்து ஆண் ஒருவர் குறுக்கே சென்றுள்ளார். இதை பார்த்ததும், டிரைவர் பொன்னுசாமி, அவர் மீது மோதாமல் தடுக்க பஸ்சை திருப்ப முயன்றார்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் நிலைதடுமாறி ஓடி அங்குள்ள பாலத்தில் இருந்து சுமார் 25 அடி ஆழத்தில் இருந்த வாய்க்காலுக்குள் பாய்ந்து பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் மற்றும் தீயணைப்பு துணையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவினாசி, தெக்கலூர், கருமத்தம்பட்டி, சேவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 15–க்கும் மேற்பட்ட ஆம்புலனஸ் வாகனங்கள் மூலம் அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த 40 பேருக்கு மருத்துவமனையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்தில் தெக்கலூர் வடுகபாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கனகராஜ் (55) மற்றும் தண்ணீர்பந்தல்பாளையத்தை சேர்ந்த சுண்டப்பன் (70) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் சப்–கலெக்டர் ஷ்ரவன் குமார் அவினாசி மருத்துவமனைக்கு சென்று படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். இந்த விபத்து குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.