ஒகி புயலால் உயிர் இழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், மீனவர்கள் கோரிக்கை
ஒகி புயலால் உயிர் இழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மீனவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது, தூத்துக்குடி மாவட்ட மீனவ சமூகத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தினர். பின்னர் தங்களின் கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்தனர். அந்த மனுவில் ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவித்து போர் கப்பல்கள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை அதிக அளவில் பயன்படுத்தி மீனவர்களின் பங்களிப்புடன் கடலில் மூழ்கிய மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புயலில் உயிர் இழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும். படகுகளை இழந்த மீனவர்களுக்கு புதிய படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ஒகி புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் உப்பள தொழிலாளர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் உருவாக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரத்தை சேர்ந்த ஜென்சி என்ற பெண் தனது உறவினர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில், மீனவரான எனது கணவர் செல்வம் கடந்த 7.11.2017 அன்று கேரள மாநிலம் கொல்லத்திற்கு மீன்பிடிக்க சென்றார். 18.11.2017 அன்று கர்நாடகா பகுதியில் இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அதன் பின்னர் அவரை பற்றி தகவல் இல்லை. அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. எனது கணவர் இருக்கும் இடத்தை அரசு கண்டு பிடித்து, அவரை மீட்க வேண்டும் என்று கூறினார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலுக்குள் காணாமல் போன மீனவர்களையும் படகுகளையும் மீட்க, மத்திய– மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் கிதர்பிஸ்மி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மணி, தெற்கு மாவட்ட தலைவர் ரிச்சர்டு தேவசகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அவர்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜா மற்றும் சிலர் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தமிழகம் முழுவதும் ஏறு தழுவுதல் நிகழ்ச்சியை நடத்திட முயற்சி செய்கிறோம். வருகிற 25.2.2018 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஏறு தழுவுதல் நிகழ்ச்சி நடத்த உள்ளோம். இதற்கு தமிழக அரசு அனுமதியும், காவல்துறை சார்பில் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
ம.தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன் கொடுத்த மனுவில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட தொழில் முடக்கத்தால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் ஒகி புயல் காரணமாக கடல் சீற்றத்தால் சேதம் அடைந்த படகுகளை சீரமைக்க மீனவர்களுக்கு உடனடியாக நிதி உதவி செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி பிரையண்ட் நகர் 11–வது தெரு மேற்கு பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக சாலைகள் உடைக்கப்பட்டன. ஆனால் மீண்டும் அவை சரிசெய்யப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகம் அதனை சரிசெய்ய வேண்டும். அதே போல் தூத்துக்குடி மாநகராட்சியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் வளர்ந்து வரும் சீமை கருவேல மரங்களை போர்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 52–வது வார்டு பகுதியில் 4–வது குடிநீர் குழாய் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. உடனடியாக அதை அமல்படுத்திட வேண்டும். இந்த வார்டில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்ய வேண்டும். கழிவுநீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் தொற்று நோய் பரவும் முன்பு கழிவு நீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.