கேரளாவுக்கு மீன்பிடிக்க சென்று மாயமான மீனவர்களை மீட்டு தரவேண்டும், வேல்முருகன் பேச்சு


கேரளாவுக்கு மீன்பிடிக்க சென்று மாயமான மீனவர்களை மீட்டு தரவேண்டும், வேல்முருகன் பேச்சு
x
தினத்தந்தி 5 Dec 2017 3:30 AM IST (Updated: 5 Dec 2017 12:14 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு மீன்பிடிக்க சென்று மாயமான கடலூர் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களை மீட்டு தர வேண்டும் என கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.

கடலூர்,

தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் மீனவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஒகி புயலில் சிக்கிய தமிழக மற்றும் கடலூர் மீனவர்களை மீட்க கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கி பேசியதாவது:–

ஒகி புயலில் சிக்கிய மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வந்தேன். ஆனால் யாருமே கண்டுகொள்ளவில்லை. புயல் எச்சரிக்கை வந்த பின்னர் மத்திய, மாநில அரசுகள் விழிப்புடன் செயல்பட்டு ரோந்து படகுகள், கப்பல் மற்றும் விமானங்கள் மூலம் படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் எங்கே இருக்கிறார்கள் என கண்டறிந்து அவர்களை உடனடியாக கரைக்கு திரும்புங்கள் என்று ஏன் அறிவிப்புகொடுக்கவில்லை.

அப்படி அறிவிப்பு கொடுத்து இருந்தால் 25 மீனவர்கள் இறந்து இருக்க மாட்டார்கள். 254 படகுகளில் சென்ற 2 ஆயிரத்து 500 மீனவர்கள் மாயமாகி இருக்க மாட்டார்கள். கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக கேரளா சென்றுள்ள தனது மகன் எப்போது திரும்பி வருவான் என்று அவர்களது தாய்மார்களும், கணவர் எப்போது திரும்பி வருவார் என்று அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகள் கவலையோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன ஆனார்கள்.

கடலையே தெய்வமாக நம்பி மீன்பிடி தொழில் செய்து குடும்பம் நடத்தும் மீனவர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. ஒகி புயல் தாக்குதலை பேரிடராக அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பிரச்சினையில் மக்களுக்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு ஆளும் கட்சியினர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடுவதிலும், ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்கு சேகரிப்பதிலும் குறியாக இருக்கிறார்கள். மாயமான மீனவர்களை கண்டுபிடித்து அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஆளும் கட்சியினர் ஓட்டு கேட்க வரக்கூடாது. அப்படி ஓட்டு கேட்க வந்தால் அவர்களை சிறைபிடிப்போம்.

எங்கள் வேதனையை புரிந்து கொண்டு கடலோர காவல்படை, கப்பல் படை மற்றும் ராணுவத்தை அனுப்பி மாயமான மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, மீட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பலியான 25 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணமும், படகுகளை இழந்த மீனவர்களுக்கு நிவாரணமும் வழங்க வேண்டும். இல்லை என்றால் அமைதி வழியில் நடைபெறும் எங்கள் போராட்டம் வன்முறை போராட்டமாக மாறும். மத்தியஅரசு அலுவலகம், கவர்னர் அலுவலகம் முன்பு மீனவர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்துக்கு மீனவர் வாழ்வுரிமை இயக்க நிறுவன தலைவர் ஏகாம்பரம் முன்னலை வகித்தார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில தொழிற்சங்க தலைவர் ஜம்புசெட், மாவட்ட செயலாளர்கள் பஞ்சமூர்த்தி, முடிவண்ணன், சின்னதுரை, தொகுதி செயலாளர் ஆனந்த், மாநில நிர்வாகிகள் பாடலி மணி, அருள்பாபு, இளைஞர் அணி செந்தில், ஒன்றிய செயலாளர்கள் ரிச்சர்ட் தேவநாதன், சக்திவேல், உலகநாதன், தயாநிதி, நகர செயலாளர்கள் கார்த்தி, தில்லை, செந்தில், சத்தியா, மீனவர் வாழ்வுரிமை இயக்க பொதுச் செயலாளர் தங்கேஸ்வரன், இளைஞர் அணி பாபு, கன்னியப்பன், சுப்பிரமணி, முரளி, முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் நகர தலைவர் சதீஷ் நன்றி கூறினார்.


Next Story