வறட்சியால் கருகிய பயிர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு


வறட்சியால் கருகிய பயிர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 5 Dec 2017 3:30 AM IST (Updated: 5 Dec 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

பழனி, தொப்பம்பட்டி பகுதிகளில் வறட்சியால் கருகிய பயிர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் பழனி, தொப்பம்பட்டி பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு கோ‌ஷமிட்டபடி வந்தனர். பின்னர் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமையில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இதுபற்றி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் கூறுகையில், கடந்த ஆண்டு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் சோளம், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து இருந்தனர். மேலும் அந்த பயிர்களை காப்பீடு செய்து இருந்தனர். மழை பெய்யாததால் பயிர்கள் அனைத்தும் கருகி விட்டன.

கருகிய பயிர்களுக்காக பல விவசாயிகளுக்கு இன்னும் வறட்சி நிவாரணம் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பே வழங்க வேண்டிய பயிர்க்காப்பீட்டு தொகையையும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்தில் உள்ளனர். பயிர் சாகுபடிக்கு வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

இதுபற்றி விவசாயிகள் குறைதீர்க்கு கூட்டத்தில் வலியுறுத்தியும், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தொகையை கொடுக்க முன்வரவில்லை. எனவே, மாவட்டம் முழுவதும் பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். மேலும் நிலுவையில் இருப்பவர்களுக்கும், தென்னை விவசாயிகளுக்கும் உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

இதுதவிர கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் கேட்டால் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கின்றனர். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கவும் மறுக்கின்றனர். எனவே, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும், என்றார்.

அதேபோல் தொப்பம்பட்டி அருகேயுள்ள வாகரை பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும், பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி மனு கொடுத்தனர்.


Next Story