புலிகள் காப்பக அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு, கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த விவசாயிகள்


புலிகள் காப்பக அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு, கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த விவசாயிகள்
x
தினத்தந்தி 5 Dec 2017 3:30 AM IST (Updated: 5 Dec 2017 12:46 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் உள்ள புலிகள் காப்பக அலுவலகத்தை சென்னைக்கு இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் புலி வேடமணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். இதில் மின்சார வசதி, வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

குறைதீர்க்கும் கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரம், நிர்வாக குழு உறுப்பினர்கள் மவுனசாமி, தங்கவேல், சுதர்சனன் உள்ளிட்டோர் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:–

கோவை காந்திபுரம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால் தற்போதும் அங்கு போக்குவரத்து நெருக்கடி உள்ளது. இதற்கு தீர்வு காண தற்போது 100 அடி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தையும், புதியதாக திறக்கப்பட்டுள்ள மேம்பாலத்தையும் இணைத்து ஒரு ரவுண்டானா அமைக்க வேண்டும். இதன்மூலம் பார்க்கேட் பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் புதிய மேம்பாலத்தை பயன்படுத்த முடியும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர காந்திபுரம் நகர பஸ் நிலையத்தில் இருந்து கிராஸ்கட் சாலைக்கு பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். ஒருவழி பாதையாக உள்ள புருக்பாண்ட் சாலையை இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி மற்றும் விவசாயிகள் 2 பேர் புலி போன்று வேடம் அணிந்து மனு கொடுக்க வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

கோவை மண்டலத்தில் முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகிய புலிகள் காப்பகங்கள் உள்ளன. இவற்றின் தலைமையிடமாக கோவை வனக் கல்லூரி வளாகத்தில் உள்ள புலிகள் காப்பக கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் அலுவலகம் விளங்குகிறது. இந்த அலுவலகத்தை திடீரென்று சென்னைக்கு மாற்ற அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. இதனால் விவசாயிகள் மட்டுமின்றி, புலிகள் காப்பகத்தை ஒட்டி வசிக்கும் பொதுமக்களும் தங்களது கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முறையிட வேண்டும் என்றால் சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே இந்த அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

குறைதீர்க்கும் கூட்டத்தின் போது அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிலர் தீக்குளிப்பு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்கும் வகையில் நேற்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மனு கொடுக்க வந்த பொதுமக்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மனு அளிக்க வந்தவர்களில் ஒரு சிலர் வைத்திருந்த தீப்பெட்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்த னர்.


Next Story