குடிதண்ணீர் வழங்க கோரி ராசிபுரம் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரிடம் மனு


குடிதண்ணீர் வழங்க கோரி ராசிபுரம் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 5 Dec 2017 3:00 AM IST (Updated: 5 Dec 2017 12:58 AM IST)
t-max-icont-min-icon

குடிதண்ணீர் வழங்க கோரி ராசிபுரம் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் வந்து கலெக்டர் ராஜாமணியிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் முசிறி தாலுகாவிற்கு உட்பட்ட ஜெயங்கொண்டம் அருகே உள்ள ராசிபுரம் கிராம மக்கள் 3 சரக்கு வாகனங்களில் கையில் காலிக்குடங்களுடன் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கடந்த சில மாதங்களாக குடிதண்ணீர் சரியாக வருவதில்லை. ஆழ் குழாய் கிணற்றில் அமைக்கப்பட்டு உள்ள மோட்டார் அடிக்கடி பழுதாகி வருகிறது. இதனால் தண்ணீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே பழுதான ஆழ் குழாய் கிணற்று மோட்டாரை சரி செய்து குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதே போன்று கீழ கல்கண்டார் கோட்டை பகுதி மக்கள் கொடுத்த மனுவில் இலவச ஆடு வழங்க பயனாளிகள் தேர்வு செய்வதில் முறைகேடு நடந்து உள்ளது. இந்த திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்ய லஞ்சம் கேட்கிறார்கள். எனவே முறையானவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தனர்.

திருச்சி மாநகராட்சி 55–வது வார்டு பகுதி மக்கள் கொடுத்த மனுவில் கீழ சாராய பட்டறை தெருவில் உள்ள ரே‌ஷன் கடையின் தரைப்பகுதி உடைந்து சேதம் அடைந்து உள்ளது. இதன் வழியாக பெருச்சாளிகள் உள்ளே புகுந்து அரிசி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே பழுதான தரைப்பகுதியை சரி செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாவட்ட குழுவினர் கொடுத்த மனுவில் புலிவலம் கிராமத்தில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள சாலைகள் அனைத்தும் மிகவும் பழுதடைந்து உள்ளது. இதை சரி செய்ய வேண்டும். மின் விளக்கு, சாக்கடை வசதி செய்து தரவேண்டும் என்று கூறியுள்ளனர்.


Next Story