குமரி மாவட்டத்தில் வரலாறு காணாத பாதிப்பு ஓ.பன்னீர்செல்வம் மீனவ கிராமங்களில் சேதங்களை ஆய்வு செய்யாதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
“குமரி மாவட்டம் வந்த துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீனவ கிராமங்களுக்கு சென்று சேதங்களை ஆய்வு செய்யாதது ஏன்?“ என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் அருகே அனந்தன் நாடார்குடி பகுதியில் புயலால் சேதம் அடைந்த வாழைகளையும், விவசாய பயிர்களையும் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
‘ஒகி‘ புயலால் குமரி மாவட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் தி.மு.க. சார்பில் மட்டும் அல்ல, தமிழக எதிர்க் கட்சி தலைவர் என்ற முறையிலே இந்த மாவட்டத்தில் இருக்கக் கூடிய 6 சட்டசபை தொகுதிகளில் அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் மேற்பார்வையில் தி.மு.க. நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு ஆய்வு பணியை நான் மேற்கொண்டேன்.
கடந்த 100 ஆண்டு காலத்தில் இப்படி ஒரு வரலாறு காணாத அளவுக்கு ‘ஒகி‘ புயல் குமரி மாவட்டத்தில் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 2004–ம் ஆண்டில் சுனாமி ஏற்பட்ட போது கடற்கரை பகுதியில் வாழக்கூடிய மீனவ மக்களுக்கு, கடற்கரை கிராமங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதே போல் 1991–ம் ஆண்டு தாக்கிய புயல் கூட இந்த அளவுக்கு பாதிப்பு இல்லை.
இந்த புயலின் சேதத்தால் குறிப்பாக மீனவர்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தையே இழந்திருக்க கூடிய ஒரு சூழல் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழக அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறோம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அண்மையில் ஒரு செய்தியை வெளியிட்டார். ஆனால் அது உண்மை அல்ல. அத்தகைய முன்னெச்சரிக்கை அறிவிப்பு எதுவும் வரவில்லை என்று அனைத்து பகுதிகளிலும் இருக்கக் கூடிய மீனவர்கள் கூறுகிறார்கள்.
மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு இருக்கிறது. மாயமான மீனவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 500, 1,000 என்று சொல்லக்கூடிய அளவில் அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. ஆனால் அரசு தரப்பில் முறையாக கணக்கெடுக்கப்பட்டு இருக்கிறதா? என்று பார்த்தால் இல்லை. மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு இருக்கிறார்களா? என்று பார்த்தாலும் இல்லை.
நிவாரண தொகையாக தமிழக அரசின் சார்பில் வெறும் ரூ.25 கோடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புயல் மழையால் உயிரிழந்து இருக்கக் கூடிய 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் என்பதை தாண்டி வேறு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. அருகில் உள்ள கேரளாவில் புயல் மழைக்கு ஏற்பட்டு இருக்கின்ற உயிரிழப்புக்கு அந்த மாநில அரசு தலா ரூ.10 லட்சம் உதவித் தொகை வழங்கி இருக்கிறது.
புயல் மழையால் ஏராளமான ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அவற்றுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு நெல் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதுபோல குமரி மாவட்டத்தில் பெருமளவு இருக்கக் கூடிய வாழை, ரப்பர் மரங்கள் சேதம் அடைந்துள்ளன. எனவே அவற்றுக்கான உற்பத்தி செலவை அரசே ஏற்க வேண்டும் என ரப்பர் மர விவசாயிகள் வலியுறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். நிறைய பேர் வீடுகளை இழந்து இருக்கிறார்கள்.
மின் வினியோகம் சரிசெய்யப்படவில்லை. 2 நாட்களில் சரி செய்யப்பட்டு விடும் என்று அந்த துறையின் அமைச்சர் பேட்டி, அறிக்கையில் தெரிவித்தார். ஆனால் மிகவும் குறைவான அளவிலேயே மின்வினியோகம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே நான் இந்த 6 சட்டமன்ற தொகுதிகளில் செய்த ஆய்வுப்பணி மூலமாக இந்த அரசை கேட்டுக்கொள்ள விரும்புவது என்னவென்றால், ஆடம்பர விழாக்களை நடத்துவதை இந்த அரசு விட்டு விட்டு உடனடியாக நிவாரண பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
நான் இந்த மாவட்டத்துக்கு வருவதையொட்டி புயல் சேதத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கி இருக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றும் முயற்சியை செய்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுமே தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியாக இருக்க கூடிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற காரணத்தால், அது ஆட்சியாளர்கள் மனதை உறுத்திக் கொண்டு இருக்கிறது.
அதனால் தான் குமரி மாவட்டத்தை அவர்கள் முற்றிலுமாக புறக்கணித்தது மட்டும் அல்ல, ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயிருப்பதை பற்றி கூட கவலைப்படாமல் தான் தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார்கள்.
ஐகோர்ட்டு உத்தரவை மீறி கட்–அவுட் வைப்பதற்கும், முதல்–அமைச்சரை வைத்து விழா நடத்துவதற்கும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்களே தவிர, புயல் சேதத்தை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை. கோவையில் நடந்த விழாவில் பேசிய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. செம்மொழி மாநாட்டில் பேனர் வைக்கப்பட்டது குறித்த வீடியோவை காட்டி பேசியிருக்கிறார்.
அவர் தான் புத்திசாலி என்று நினைத்து அந்த வீடியோவை காண்பித்தார். தி.மு.க. ஆட்சியில் வைக்கப்பட்ட பேனர்களில் அன்றைய முதல்–அமைச்சராக இருந்த கலைஞரின் படம் கிடையாது. தி.மு.க. கொடியும் கிடையாது. எல்லாம் திருவள்ளுவர் படங்கள், தமிழுக்காக போராடியவர்கள் மற்றும் பாவேந்தரின் படங்கள் தான் வைக்கப்பட்டு இருந்தன. இதுகூட முதல்–அமைச்சருக்கு தெரியாததுதான் எனக்கு வருத்தமாக உள்ளது.
துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இங்கு வந்தபோது மீனவ கிராமங்களுக்கு சென்று சேதங்களை ஆய்வு செய்யாதது ஏன்? அவர் போனால் மீனவ மக்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் செல்லவில்லை. கேரள மாநில முதல்–அமைச்சர் கேரள மாநிலத்தையே பேரிடர் மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். எனவே பேரிடர் பாதித்த மாவட்டமாக குமரி மாவட்டத்தை அறிவித்தால் தான் அதற்கு தேவையான நிதியை மத்திய அரசு மூலமாக பெற்று பாதிப்புகளை சரிசெய்ய முடியும்.
தமிழக அரசு இதுதொடர்பாக மத்திய அரசிடம் கேட்க மாட்டார்கள். ஏன் என்றால் மத்திய அரசிடம் அவர்கள் மண்டியிட்டு சரணாகதி அடைந்திருப்பதால் மத்திய அரசிடம் எதையும் வாதாடி பெற மாட்டார்கள். குமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க மத்திய அரசிடம் நாங்கள் நிச்சயமாக வலியுறுத்துவோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.