திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்ததை விமானி கண்டுபிடித்ததால் 156 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
செம்பட்டு,
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா தனியார் விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம் திருச்சிக்கு காலை 8.55 மணிக்கு வந்து, மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு கோலாலம்பூருக்கு காலை 9.35 மணிக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். ஆனால் நேற்று அந்த விமானம் 1 மணி நேரம் 5 நிமிடம் தாமதமாக காலை 10 மணிக்கு வந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக 156 பயணிகள் திருச்சி விமானநிலையத்தில் காத்திருந்தனர்.
இந்நிலையில் கோலாலம்பூருக்கு மீண்டும் புறப்படுவதற்காக பயணிகள் ஏறுவதற்கு முன்பு அந்த விமானத்தை சோதனை செய்தபோது, அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி ஒருவர் கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர் அந்த விமான நிறுவனத்துக்கும், விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விமானநிறுவனத்தில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் விரைந்து வந்து விமானத்தில் ஏற்பட்டிருந்த கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் நீண்டநேரமாக விமானநிலையத்திலேயே காத்து கொண்டிருந்ததால் அவதியடைந்தனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறை உடனடியாக சரிசெய்ய முடியாததால் 78 பயணிகள் திருச்சியில் இருந்து நேற்று மதியம் கோலாலம்பூருக்கு புறப்பட்ட மலிண்டோ விமானத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள பயணிகளை விமான நிறுவனத்தினர் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கவைத்தனர்.
இந்நிலையில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்வதற்கு தேவையான உதிரிபாகங்கள் மலேசியாவில் இருந்து விமானம் மூலம் மாலையில் தான் வருகிறது. இதனால் இரவில் தான் கோளாறு சரிசெய்யப்படும் என்றும், மீதமுள்ள பயணிகள் மாலையில் கோலாலம்பூர் செல்லும் மற்றொரு ஏர் ஏசியா விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி மற்ற பயணிகள் மாலை கோலாலம்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்டிருந்த கோளாறை விமானி முன்கூட்டியே கண்டுபிடித்து தகவல் தெரிவித்ததால், அதில் பயணம் செய்ய இருந்த 156 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.