அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து மெஸ்காம் அலுவலகத்துக்கு பூட்டுப்போட்டு போராட்டம்
அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் மெஸ்காம் அலுவலகத்துக்கு பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிக்கமகளூரு,
அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் மெஸ்காம் அலுவலகத்துக்கு பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:–
மெஸ்காம் அலுவலகத்துக்கு பூட்டுசிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவிற்கு உட்பட்டது பனகல் கிராமம். இந்த கிராமத்தில் மெஸ்காம் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த நிலையில் பனகல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சரிவர மின்வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த கிராம மக்கள் தடையில்லாமல் மின்சாரத்தை வினியோகம் செய்யக்கோரி மெஸ்காம் அதிகாரிகளிடம் முறையிட்டு வந்தனர்.
இருப்பினும் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வந்தது. இதனால் ஆத்திரம் கிராம மக்கள் நேற்று காலையில் பனகல் கிராமத்தில் உள்ள மெஸ்காம் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் மெஸ்காம் அலுவலகத்திற்கு பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோரிக்கை மனுஇதுகுறித்து அறிந்த மெஸ்காம் அதிகாரி விஜயகுமார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் தடையில்லா மின்சாரம் வழங்கக்கோரி கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி விஜயகுமார், தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.