காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலுக்கு எதிராக பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

பெங்களூருவில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலுக்கு எதிராக பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெங்களூரு,
பெங்களூருவில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலுக்கு எதிராக பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஷோபா எம்.பி. உள்பட 100–க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்கேரளாவில் சூரியசக்தி மின்தகடு ஊழலில் கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கர்நாடகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக பா.ஜனதா மகளிர் அணி சார்பில் பெங்களூருவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மகளிர் அணியினர், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் கர்நாடகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதில் கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் ஷோபா எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:–
காங்கிரஸ் கட்சி திவாலாகிவிட்டதா?. ஊழல், செக்ஸ் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வேணுகோபாலை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமித்து இருப்பது சரியல்ல. அவர் கர்நாடகத்தை விட்டு வெளியேற வேண்டும். அவர் தனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும். காங்கிரஸ் மேலிட தலைவர்கள் இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது ஏன்?.
கர்நாடக பெண்களை...சித்தராமையாவுக்கு மரியாதை இருந்திருந்தால் வேணுகோபாலை மாற்ற வேண்டும் என்று கேட்டு இருப்பார். ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்ற உடனேயே வேணுகோபாலை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் அலுவலகம் முன்பு நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
கர்நாடக பெண்களை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் தள்ள, பெண்களை அரபு நாடுகளுக்கு விற்கும் மோசடி கும்பல் இங்கு உள்ளது. பெங்களூரு, மைசூருவில் இந்த நிலை அதிகமாக இருக்கிறது. நமது போலீசாரை காங்கிரஸ் அரசு செயல்பட விடாமல் கட்டி வைத்துள்ளது. போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை வழக்கில் தொடர்புடைய மந்திரி கே.ஜே.ஜார்ஜை நீக்க வேண்டும். ஊழல் தடுப்பு படையை மாநில அரசு தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்கள் மீது ஊழல் வழக்குகளை போடுகிறது.
இவ்வாறு ஷோபா எம்.பி. பேசினார்.
பின்னர் அவர்கள் அனந்தராவ் சர்க்கிளில் இருந்து காங்கிரஸ் பவனை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது ஷோபா எம்.பி. உள்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பா.ஜனதா மகளிர் அணியினர் 100–க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.