போரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை
போரூர் அருகே தக்காளி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
பூந்தமல்லி,
போரூரை அடுத்த காரம்பாக்கம், சமயபுரம் மெயின்ரோடு, 7–வது தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 28). கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டை பூட்டி விட்டு கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று விட்டார். வியாபாரத்தை முடித்துவிட்டு நேற்று காலை அவர் வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள் எல்லாம் சிதறிக் கிடந்தன.
வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த 20 பவுன் நகை, வெள்ளி பொருட்களை மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளை அடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை சோதனை செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.