வடகிழக்கு பருவமழைக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? கலெக்டர் ரோகிணியுடன் ஆலோசனை


வடகிழக்கு பருவமழைக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன?  கலெக்டர் ரோகிணியுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 6 Dec 2017 4:30 AM IST (Updated: 6 Dec 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்திலிருந்து அரசு முதன்மை செயலாளர், சேலம் கலெக்டருடன் ஆலோசனை நடத்தினார்.

சேலம்,

வடகிழக்கு பருவமழையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையாளர் டாக்டர் சத்தியகோபால், நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணியுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மேட்டூர் சப்-கலெக்டர் மேகநாதரெட்டி, சேலம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.சதீஷ் மற்றும் உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள், மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் அனைத்து துறை அரசு முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் கலெக்டர் ரோகிணி தெரிவித்ததாவது:-

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் போதிய அளவில் நோய்தடுப்பு மருந்துகள் இருப்பில் வைத்திருக்கவும், ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுபாட்டில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் குளோரினேசன் செய்திடவும், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டை, ஏரி ஆகியவற்றின் நீர் இருப்பு விவரம் குறித்த தினசரி அறிக்கையினை அனுப்பி வைத்திட மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்காத வண்ணம் பார்த்துகொள்ளவும், மாநகராட்சி சாலைகளில் பழுது இருப்பின் அதனை நிவர்த்தி செய்திடவும், பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்களின் உறுதித்தன்மையினை கண்டறிந்து உடனடி அறிக்கை அனுப்பி வைத்திடவும், சிறு பழுதுகள் இருப்பின் உடனடி நிவர்த்தி செய்திடவும் அறிவுறுத்தப்பட்டது.

தீயணைப்புத்துறையின் சார்பில் உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைத்திருக்கவும், குறிப்பாக மழையின் போது சாலைகளில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்காத வகையில் உடனடியாக மரங்களை அப்புறப்படுத்த தேவையான பேட்டரியில் இயங்கக்கூடிய மரம் வெட்டும் எந்திரங்கள் போதிய அளவில் தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளின் உறுதித்தன்மை குறித்த ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை அனுப்பி வைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இவ்வாறு கலெக்டர் ரோகிணி தெரிவித்தார். 

Next Story