ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்தில் காங்கிரஸ் கவனம் செலுத்தவில்லை மத்திய மந்திரி அனந்தகுமார் குற்றச்சாட்டு


ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்தில் காங்கிரஸ் கவனம் செலுத்தவில்லை மத்திய மந்திரி அனந்தகுமார் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Dec 2017 3:00 AM IST (Updated: 7 Dec 2017 12:51 AM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்தில் காங்கிரஸ் கவனம் செலுத்தவில்லை என்று மத்திய மந்திரி அனந்தகுமார் குற்றம்சாட்டினார்.

பெங்களூரு,

ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்தில் காங்கிரஸ் கவனம் செலுத்தவில்லை என்று மத்திய மந்திரி அனந்தகுமார் குற்றம்சாட்டினார்.

அம்பேத்கருக்கு எதிரான...

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி பா.ஜனதா சார்பில் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் அவரது உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய பாராளுமன்ற விவகாரம் மற்றும் உரத்துறை மந்திரி அனந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மத்திய மந்திரி அனந்தகுமார் பேசியதாவது:–

காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் இருந்தே ஆதிதிராவிடர்கள் மற்றும் அம்பேத்கருக்கு எதிரான கொள்கையை கடைபிடித்து வருகிறது. அம்பேத்கர் வாழ்ந்தபோது அவரை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடித்தது. அம்பேத்கருக்கு எதிரான கொள்கையை சித்தராமையா பின்பற்றி வருகிறார். அரசியல் சாசனம் நிறுவப்பட்ட நாள் அன்று கர்நாடக அரசு சார்பில் பத்திரிகைகளுக்கு முழு பக்க விளம்பரம் வழங்கப்பட்டது.

மன்னிப்பு கோர வேண்டும்

அதில் அம்பேத்கரின் படத்தை போடாமல், சித்தராமையாவின் படம் மட்டும் அச்சிடப்பட்டு இருந்து. இதன் மூலம் அம்பேத்கருக்கு சித்தராமையா அவமானம் இழைத்துவிட்டார். இதற்காக மக்களிடம் சித்தராமையா மன்னிப்பு கோர வேண்டும். அம்பேத்கருக்கு பா.ஜனதா ஆதரவில் மத்தியில் ஆட்சி புரிந்த வி.பி.சிங் அரசு தான் பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.

காங்கிரஸ் ஆட்சி காலங்களில் அம்பேத்கருக்கு மரியாதை செய்வது குறித்து நினைத்ததே கிடையாது. மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு அம்பேத்கருக்கு சொந்தமான இடங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. அம்பேத்கர் இறந்தபோது அவருக்கு டெல்லியில் சமாதி அமைக்கக்கூட காங்கிரஸ் ஒப்புக்கொள்ளவில்லை. ஆதிதிராவிடர்களின் மோசமான நிலைக்கு, நாட்டை 60 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் தான் காரணம்.

கவனம் செலுத்தவில்லை

ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்தில் காங்கிரஸ் கவனம் செலுத்தவில்லை. அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து மக்களுக்கு வினியோகிக்க வேண்டும். அம்பேத்கரின் கொள்கைப்படி அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மோடி அரசு பாடுபட்டு வருகிறது. இதற்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஆதிதிராவிடர் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. அம்பேத்கர் மற்றும் ஆதிதிராவிட மக்களின் விரோதியாக காங்கிரஸ் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். வரும் நாட்களில் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும். அப்போது ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நலத்திட்டங்கள் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அனந்தகுமார் பேசினார்.


Next Story