பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற 46 பேர் கைது


பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற 46 பேர் கைது
x
தினத்தந்தி 7 Dec 2017 4:30 AM IST (Updated: 7 Dec 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற மனித நேய ஜனநாயக கட்சியினர் 46 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி பாபர்மசூதி இடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 6-ந்தேதி அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று மனித நேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்டம் சார்பில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் இப்ராகிம்ஷா தலைமை தாங்கினார். பொருளாளர் அஷ்ரப்அலி முன்னிலை வகித்தார். மாநில இணை பொது செயலாளர் மைதீன் உலவி கண்டன உரை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் பாபர் மசூதி கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலர் பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். இதைத்தொடர்ந்து மறியலுக்கு முயன்ற 46 பேரை போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதே போன்று திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படையினரும் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர். 

Next Story