ஆக்கிரமிப்பு அகற்றும்போது தொழிலாளி சாவு: கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் முற்றுகை
தேவதானப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு அகற்றும் போது மயங்கி விழுந்து இறந்த தொழிலாளியின் உறவினர்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தேனி,
தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியில் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி காமாட்சி (வயது 70) என்பவரின் வீடும், ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி இடிக்கப்பட்டது. இதைப்பார்த்ததும் காமாட்சி திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
அதிகாரிகள் தள்ளிவிட்டதால் தான் காமாட்சி இறந்து விட்டதாக கூறி அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மறியலில் ஈடுபட்ட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், காமாட்சியின் உறவினர்களும், தமிழ்ப்புலிகள் கட்சியை சேர்ந்தவர்களும் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள், கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற காமாட்சியின் மனைவி காளியம்மாள் கூறுகையில், ‘ஊராட்சியில் சாக்கடை கால்வாய் கட்டுவதற்கு இடம் கொடுத்தோம். ஆனால், ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீட்டை இடித்து விட்டனர். தடுக்க முயன்ற எனது கணவரை ஊராட்சி செயலாளர் தள்ளிவிட்டதால் தான் அவர் இறந்தார். ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட நபர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கூறினார்.
போராட்டம் நடத்தியவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஆனந்தி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 58 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.