அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வரவேற்பு மையம் அமைக்க வேண்டும் கர்நாடக போலீஸ் டி.ஜி.பி.உத்தரவு


அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வரவேற்பு மையம் அமைக்க வேண்டும்  கர்நாடக போலீஸ் டி.ஜி.பி.உத்தரவு
x
தினத்தந்தி 7 Dec 2017 2:30 AM IST (Updated: 7 Dec 2017 1:32 AM IST)
t-max-icont-min-icon

புகார்தாரர்களின் பிரச்சினைகளை கேட்டறிய வசதியாக அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வரவேற்பு மையம் அமைக்க கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூ உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு,

புகார்தாரர்களின் பிரச்சினைகளை கேட்டறிய வசதியாக அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வரவேற்பு மையம் அமைக்க கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூ உத்தரவிட்டுள்ளார்.

வரவேற்பு மையம்

கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூ புதிதாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது, போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க வருபவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நல்ல நட்பு உருவாக வாய்ப்பு ஏற்படும் வகையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வரவேற்பு மையம் அமைக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. மேலும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

கர்நாடகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் டிசம்பர் மாதம் 31–ந் தேதிக்குள் வரவேற்பு மையம் அமைக்க வேண்டும். இந்த மையத்தில் ‘மே ஐ ஹெல்ப் யூ’ என்று ஆங்கிலம் மற்றும் கன்னட மொழியில் எழுதப்பட்டுள்ள தகவல் பலகை இருக்க வேண்டும். இந்த மையத்தில் குடிநீர் வசதி, மின்விசிறி மற்றும் இருக்கை வசதிகள் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

பயிற்சி பெற்ற போலீஸ்காரர் ஒருவர் இந்த மையத்தில் அமர்ந்து போலீஸ் நிலையத்திற்கு வரும் புகார்தாரர்களின் பிரச்சினைகளை கேட்டறிய வேண்டும். பார்வையாளர் வருகை பதிவேட்டை கையாள வேண்டும். இந்த பதிவேட்டில் பிரச்சினையை கூறும் நபரின் பெயர், விவரங்கள் மற்றும் அவருடைய கையெழுத்து, அத்துடன் பிரச்சினையை கேட்ட போலீஸ்காரரின் கையெழுத்து ஆகியவற்றையும் குறிப்பிடப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ரூ.1 லட்சம் ஒதுக்கீடு

இந்த வரவேற்பு மையம் அமைக்க ‘ஜனசினேகி போலீஸ்’ எனும் திட்டத்தில் இருந்து ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த மையத்தில் பணி செய்யும் வகையில் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களில் இருந்தும் தலா 3 அல்லது 4 போலீஸ்காரர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியின் போது புகார்தாரர்களிடம் பொறுமையாக பேசுவது உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் தொடர்பாக அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட உள்ளது. மேலும், இந்த மையம் விரைவில் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story