பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க கோரி கோவில்பட்டியில் 14-ந் தேதி சாலை மறியல்


பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க கோரி கோவில்பட்டியில் 14-ந் தேதி சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Dec 2017 3:45 AM IST (Updated: 7 Dec 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி வருகிற 14-ந் தேதி கோவில்பட்டியில் சாலைமறியல் நடத்தப்படும் என்று தமிழ் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவில்பட்டி,

கோவில்பட்டி- கடலையூர் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ் விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் காளிராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக நடராஜன், செயலாளராக துரை, துணை தலைவராக சாமிய்யா, பொருளாளராக செல்வராஜ், துணை செயலாளராக மார்ட்டின் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த 2015-2016, 2016-2017 ஆண்டுகளில் பயிர் காப்பீட்டு தொகையாக தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் ரூ.9 கோடியே 42 லட்சம் செலுத்தினர். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த மாதம் 30-ந் தேதிக்குள் இழப்பீட்டு தொகை தருவதாக தெரிவித்தனர். ஆனால் இன்னும் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. வருகிற 10-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். இல்லையெனில் வருகிற 14-ந் தேதி கோவில்பட்டியில் விவசாயிகளை திரட்டி சாலைமறியலில் ஈடுபடுவது.

விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் நினைவு தினமான வருகிற 22-ந் தேதி கோவில்பட்டி பயணியர் விடுதியில் நினைவு அஞ்சலி கூட்டம் நடத்துவது. விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டியில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்திய பொதுமக்களை கைது செய்த காவல் துறையினரைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில இளைஞர் அணி செயலாளர் சுந்தரராஜ், கோபாலகிருஷ்ணன், பாப்பா, வெங்கடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story