ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் செல்லுபடியாகும் மும்பை ஐகோர்ட்டு உறுதிசெய்தது


ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் செல்லுபடியாகும் மும்பை ஐகோர்ட்டு உறுதிசெய்தது
x
தினத்தந்தி 7 Dec 2017 3:35 AM IST (Updated: 7 Dec 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் செல்லுபடியாகு தன்மையை உறுதிப்படுத்தி மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் செல்லுபடியாகு தன்மையை உறுதிப்படுத்தி மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம்

நாட்டில் ரியல் எஸ்டேட் வணிகத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டம் (ரிரா சட்டம்) கடந்த மே மாதம் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்கீழ், ஒவ்வொரு ரியல் எஸ்டேட் அதிபரும், கட்டுமான அதிபரும் மாநில அளவிலான ஒழுங்குமுறை ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், குறித்த கால வரையறைக்குள் வாடிக்கையாளர்களுக்கு வீடுகளை ஒப்படைக்க தவறினால், அதற்கு ரியல் எஸ்டேட் அதிபர்கள் இழப்பீடு வழங்கவும், தவறும்பட்சத்தில் அவர்களது பதிவுகளை ரத்துசெய்து, அவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்தது. இந்த சட்டத்தை எதிர்த்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

முரட்டுத்தனமான விதிகளுக்கு கடிவாளம்

இந்த வழக்கு நீதிபதிகள் நரேஷ் பாட்டீல் மற்றும் ராஜேஷ் கேத்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரியல் எஸ்டேட் அதிபர்களின் முரட்டுத்தனமான விதிமுறைகளுக்கு கடிவாளம் போட்டு, வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கவே இதுபோன்ற கடுமையான விதிகள் வகுக்கப்பட்டதாக அரசு தரப்பு வக்கீல் வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டனர். நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பு விவரம் வருமாறு:–

நாடு முழுவதும் வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்க இந்த சட்டம் இன்றியமையாதது. மேலும், இந்த சட்டம் ரியல் எஸ்டேட் அதிபர்களை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் துறையை மேம்படுத்தவும் வழிவகை செய்கிறது. குறிப்பாக, நாடு முழுவதும் முழுமையற்ற கட்டுமான பணிகள் முடிவுக்கு வரும்.

அவகாசம்

அசாதாரண சூழலில், கட்டுமான பணியை நிறைவுசெய்ய ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு ஓராண்டுக்கு மேல் அவகாசம் கொடுக்கலாம். அப்போது, அவர்களது பதிவுகளை நீட்டிக்க ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


Next Story