பாதுகாப்பு ஏற்பாடுகளை பொருட்படுத்தாமல் திடீரென சென்று மீனவர்களை சந்தித்த கவர்னர்


பாதுகாப்பு ஏற்பாடுகளை பொருட்படுத்தாமல் திடீரென சென்று மீனவர்களை சந்தித்த கவர்னர்
x
தினத்தந்தி 8 Dec 2017 4:30 AM IST (Updated: 7 Dec 2017 11:05 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட சுற்றுப்பயண திட்டத்தில் திடீரென மாற்றம் செய்துவிட்டு, கடற்கரை பகுதியான குளச்சல் நகருக்கு சென்று மீனவர்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்தார். கடலில் மாயமான மீனவரின் வீட்டுக்கு சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

குளச்சல்,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். கோவையில் நடந்த பல்லைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் திடீரென அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியது பெரும் பரபரப்பை உருவாக்கியது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நெல்லையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த கவர்னர், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறி வீடு, வீடாகச் சென்று மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.

தொடர்ந்து இரவில் நெல்லையில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரி வந்து தங்கினார். நேற்று அவர் குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் கற்காடு, தெரிசனங்கோப்பு, தடிக்காரன்கோணம் ஆகிய பகுதிகளில் புயல் சேத பகுதிகளை பார்வையிட திட்டமிட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென நேற்று அவர் தனது பயண திட்டத்தை மாற்றினார்.

இதனால் முதலில் சுசீந்திரம் கற்காடு பகுதிக்கு செல்லாமல், கடற்கரை பகுதியான குளச்சலுக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டது. பயணத்திட்டத்தில் குளச்சல் இடம்பெறாததால் போலீஸ் அதிகாரிகளும், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளும் தடுமாற்றம் அடைந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொருட்படுத்தாமல் கவர்னர், குளச்சலுக்கு சென்றார்.

அங்குள்ள ஒரு மண்டபத்தில் குளச்சல் பங்குத்தந்தை எட்வின், குளச்சல் பங்கு விசைப்படகு மற்றும் மீன்பிடிப்போர் நலச்சங்க நிர்வாகிகள், வியாபாரிகள்–ஏலக்காரர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கூடியிருந்தனர். கவர்னரை அவர்கள் வரவேற்றனர். தொடர்ந்து மீனவர்களின் கோரிக்கைகளை பங்குத்தந்தை எட்வின் ஆங்கிலத்தில் எடுத்துக்கூறினார்.

அதேபோல் அங்கிருந்த மீனவ சங்க நிர்வாகிகளும், பங்குப் பேரவை நிர்வாகிகளும் கோரிக்கைகளை விளக்கினர். குறிப்பாக ‘ஒகி‘ புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், காணாமல் போன மீனவர்களை இறந்தவர்கள் என அறிவிப்பதற்கு, உடல்கள் கிடைக்க 2 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி, அவர்களை இறந்தவர்கள் என அறிவித்து அவர்களுடைய குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கவர்னர் அந்த கோரிக்கைகளை மிகவும் கவனமுடன் கேட்டார். மேலும் அந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவும் கொடுக்கப்பட்டது.

பின்னர் மீனவர்கள் மத்தியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசும்போது, “நான் உங்கள் பகுதிக்கு முதன் முறையாக வந்துள்ளேன். இந்த புயலால் நீங்கள் அடைந்துள்ள சோகத்தை நான் உணர்கிறேன். புயல் பாதிப்பு விவரங்களை நீங்கள் என்னிடம் கூறியிருக்கிறீர்கள். நீங்கள் கொடுத்துள்ள மனுவை நான் படித்தேன். கோரிக்கைகளை தெளிவாக, சுருக்கமாக தந்திருக்கிறீர்கள். மாவட்ட கலெக்டரும் உங்களது கோரிக்கைகள் குறித்தும், சேத விவரங்கள் குறித்தும் தெரிவித்தார்.

புயல் சேத விவரங்கள் குறித்து உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் கணக்கிட்டு, ஆய்வு செய்து வருகிறார்கள். உங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். உங்களது கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார். மேலும் பங்குத்தந்தை எட்வினிடம் கவர்னர் சில கருத்துகளை தெரிவித்தார். அதுகுறித்து பங்குத்தந்தை எட்வின், கவர்னர் தெரிவித்ததாக கூறியதாவது:–

“மீனவர்களின் கோரிக்கை நியாயமானதுதான். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் போது மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். விரைவில் நான் டெல்லி செல்ல இருக்கிறேன். அப்போது உங்கள் கோரிக்கைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி நிறைவேற்ற வலியுறுத்துவேன்“ என்று தெரிவித்ததாக பங்குத்தந்தை எட்வின் கூறினார்.

புயலில் சிக்கி மாயமான குளச்சலை சேர்ந்த ஜாண் டேவிட்சன் இல்லத்துக்கு கவர்னர் சென்றார். கார் நுழைய முடியாத குறுகலான தெருவுக்குள் இருந்த அவரது வீட்டுக்கு மெயின் தெருவில் இருந்து சில அடி தூரம் கவர்னர் நடந்து சென்றார். அங்கு கவர்னரைப் பார்த்ததும் ஜாண் டேவிட்சன் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் அங்கிருந்த பெண்கள் கவர்னரின் கரத்தை பற்றிக்கொண்டு, ஜாண் டேவிட்சனை இழந்த எங்களுக்கு வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது. எனவே எங்கள் குடும்பத்துக்கு தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று கதறி அழுதபடியே கூறினர். அவர்களுக்கு கவர்னர் ஆறுதல் கூறினார்.

ஆண்கள் சிலரும் அழுதபடியே வந்து, கடலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை கவர்னரிடம் கூறினர். அவர்களிடம் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்தார்.

பின்னர் அவர் அந்த வீட்டில் இருந்து காரில் ஏறிச்செல்வதற்காக நடந்து சென்றபோது வழியில் நின்ற ஒரு பெண், “புயலில் சிக்கிய மீனவர்களை சிறிது நாட்களுக்கு முன்பே தேடி இருந்தால் பலர் காணாமல் போய் இருக்க மாட்டார்கள். சிலர் இறந்திருக்க மாட்டார்கள். எனவே வருங்காலங்களிலாவது குமரி மாவட்டத்தில் காணாமல் போகும் மீனவர்களை விரைவாக கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் ஒன்றை குமரி மாவட்டத்திலேயே நிறுத்த வேண்டும்“ என்றார்.

உடனே அந்த பெண்ணிடம் கவர்னர் பன்வாரிலால் புரோகித், “இதுதொடர்பாக ராணுவ மந்திரியிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். காணாமல் போன மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. விரைவில் மீனவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்“ என்றார். அதன்பிறகு கவர்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


Next Story