கழுகுமலையில் பலத்த மழை: தரைமட்ட பாலத்தை காட்டாற்று வெள்ளம் அடித்து சென்றது


கழுகுமலையில் பலத்த மழை: தரைமட்ட பாலத்தை காட்டாற்று வெள்ளம் அடித்து சென்றது
x
தினத்தந்தி 8 Dec 2017 3:00 AM IST (Updated: 7 Dec 2017 11:54 PM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் பலத்த மழை பெய்ததால், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைமட்ட பாலத்தில் சிமெண்டு லோடு ஏற்றிச்சென்ற லாரி சிக்கிக்கொண்டது.

கழுகுமலை,

கழுகுமலையில் பலத்த மழை பெய்ததால், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைமட்ட பாலத்தில் சிமெண்டு லோடு ஏற்றிச்சென்ற லாரி சிக்கிக்கொண்டது. அந்தரத்தில் தொங்கிய அந்த லாரியில் இருந்து டிரைவர் கீழே குதித்து தண்ணீரில் நீந்தி உயிர் தப்பினார்.

தரைமட்ட பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் பலத்த மழை பெய்தது. கழுகுமலை– கோவில்பட்டி மெயின் ரோடு குமாரபுரம் பஸ் நிறுத்தத்தில் உப்போடை பாலம் புதிதாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு ஓடையின் குறுக்கே ராட்சத குழாய்கள் பதித்து, தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று வந்தன. நேற்று அதிகாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த பலத்த மழையால், குமாரபுரம் உப்போடை தரைமட்ட பாலத்தை மூழ்கடித்தவாறு காட்டாற்று வெள்ளம் சென்றது.

பழுதாகி நின்ற லாரி

இந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் கோவில்பட்டியில் இருந்து கழுகுமலைக்கு சென்ற தனியார் பஸ், குமாரபுரம் தரைமட்ட பாலத்தை கடந்து சென்றது. அந்த பஸ்சை பின்தொடர்ந்து சிமெண்டு லோடு ஏற்றிய லாரியும் தரைமட்ட பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த பாலத்தின் நடுவில் சென்றபோது திடீரென்று லாரி பழுதாகி நின்று விட்டது.

உடனே லாரி டிரைவரான தென்காசி ஊர் மேலழகியான் பகுதியை சேர்ந்த கோபால்(வயது 61), லாரியில் இருந்து கீழே இறங்கி சென்று லாரியில் ஏற்பட்டு இருந்த சிறிய பழுதை சரிசெய்து கொண்டு இருந்தார். அப்போது தரைமட்ட பாலத்தின் மீது சுமார் ஒரு அடி உயரத்தில் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதனால் அவர் மீண்டும் லாரியில் ஏறி லாரியை ஓட்ட முயன்றார்.

பாலத்தை வெள்ளம் அடித்து சென்றது

அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் தரைமட்ட பாலத்துக்கும், சாலைக்கும் இடையில் லாரி அந்தரத்தில் தொங்கியவாறு நின்றது. உடனே லாரியில் இருந்து டிரைவர் கீழே குதித்து தண்ணீரில் நீந்தி அக்கரைக்கு சேர்ந்து உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கழுகுமலை போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, சாலையின் இருபுறமும் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் கோவில்பட்டியில் இருந்து கழுகுமலைக்கு சென்ற வாகனங்கள் செட்டிகுறிச்சி வழியாகவும், திருவேங்கடம் வழியாகவும் சுற்றி சென்றன.

தரமான தரைமட்டபாலம்...

கடந்த 3 மாதங்களுக்கு முன்பும் இதேபோன்று குமாரபுரம் தரைமட்ட பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் சில நாட்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எனவே அங்கு புதிய பாலம் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் வரையிலும், வெள்ளத்தில் அடித்து செல்லாத வகையில், தரைமட்ட பாலத்தில் தரமான தார் சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story