கண் மருத்துவமனை-10 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி போலீசார் விசாரணை


கண் மருத்துவமனை-10 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 Dec 2017 3:45 AM IST (Updated: 8 Dec 2017 12:57 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள கண் மருத்துவமனை மற்றும் 10 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி தலைமை தபால் நிலையம் ரவுண்டானாவில் இருந்து பழைய ரெயில்வே மண்டபத்துக்கு செல்லும் வழியில் குட்ஷெட் அருகே உள்ள வணிக வளாகத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள், வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்பட 10-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் கண் மருத்துவமனை உள்ளன. அவற்றை நேற்று முன்தினம் இரவு அதன் உரிமையாளர்கள் பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை கடைகளுக்கு வந்து பார்த்த போது 10 கடைகளின் ஷட்டர்களில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கடைகளின் உரிமையாளர்கள், உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன, பீரோ, மேஜை டிராயர்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. இதைப்போன்று கண் மருத்துவமனையிலும் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.

2 பேரிடம் விசாரணை

ஆனால், அந்த கடைகள் மற்றும் மருத்துவமனையில் பணம் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விரல்ரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 நபர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரேநாள் இரவில் அடுத்தடுத்துள்ள 10 கடைகள் மற்றும் கண் மருத்துவமனையில் கொள்ளை முயற்சி நடந்துள்ள சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story