சட்டசபை தேர்தல் நெருங்குவதால் வட கர்நாடகம் மீது சித்தராமையா அக்கறை காட்டுகிறார் குமாரசாமி குற்றச்சாட்டு
சட்டசபை தேர்தல் நெருங்குவதால் வட கர்நாடகம் மீது சித்தராமையா திடீரென்று அக்கறை காட்டுகிறார் என்று குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
பெங்களூரு,
சட்டசபை தேர்தல் நெருங்குவதால் வட கர்நாடகம் மீது சித்தராமையா திடீரென்று அக்கறை காட்டுகிறார் என்று குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
ஜனதா தளம்(எஸ்) கட்சியின் கர்நாடக மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வட கர்நாடகம் மீது அக்கறைபா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து வருமாறு நிர்வாகிகளுக்கு நான் எந்த அழைப்பையும் விடுக்கவில்லை. மாநில மக்களின் நலனுக்காக யாராவது கைகோர்க்க முன்வந்தால் அதை நான் ஏற்றுக்கொள்வேன். நான் யாரையும் தேடி செல்லமாட்டேன். 4 ஆண்டுகளுக்கு பிறகு சித்தராமையா வட கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்ய தொடங்கியுள்ளார். சட்டசபை தேர்தல் நெருங்குவதால் வட கர்நாடகம் மீது அவருக்கு திடீர் அக்கறை வந்துள்ளது.
பட்கல்லில் ரூ.1,500 கோடிக்கு திட்ட பணிகளை சித்தராமையா தொடங்கி வைத்துள்ளார். இது சித்தராமையாவின் தேர்தல் பிரசாரம் ஆகும். இதற்கு மாவட்ட நிர்வாகமே ஏற்பாடுகளை செய்துள்ளது. நாட்டில் வேறு எங்கும் இத்தகைய நிகழ்வு நடந்தது இல்லை. மக்கள் வரிப்பணத்தில் தேர்தல் பிரசாரத்தை சித்தராமையா தொடங்கி இருக்கிறார்.
குடிகாரர்களின் பாக்கெட்டில்...இது ‘பிக்பாக்கெட்‘ அரசு. கர்நாடகத்தில் 10 ரூபாய் மதுபானம் மீது கண்டபடி வரிகளை போட்டு 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பணத்தில் அன்ன பாக்ய, இலவச பால் திட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் கர்நாடக அரசு ரூ.1.28 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. குடிகாரர்களின் பாக்கெட்டில் இருந்து பணத்தை பறித்து இந்த அரசு திட்டங்களை அமல்படுத்துகிறது.
எங்கள் கட்சியை விட்டு விலகுபவர்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. கட்சியால் பயன் அடைந்தவர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும். கட்சிக்கு சேதத்தை ஏற்படுத்தி செல்பவர்கள் எங்களுக்கு தேவை இல்லை. இரட்டை நிலைப்பாட்டுடன் அரசியல் நடத்துபவர்களை சகித்துக்கொள்ள மாட்டேன். முந்தைய பா.ஜனதா ஆட்சியில் எடியூரப்பா சேலை, சைக்கிள் கொடுத்ததை சித்தராமையா கிண்டல் செய்கிறார்.
சாதனை செய்துவிடவில்லைஎடியூரப்பாவை போல் சித்தராமையாவும் அன்ன பாக்ய, இலவச பால் திட்டத்தை மட்டும் அமல்படுத்தி இருக்கிறார். சித்தராமையா வேறு ஒன்றும் பெரிய சாதனை செய்துவிடவில்லை. எம்.எல்.ஏ.க்கள் இல்லாத நேரத்தில் வளர்ச்சி திட்டங்களை சித்தராமையா அறிவிக்கிறார். வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தல் என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் வீண் ஆக்கப்படுகிறது.
விளம்பரத்திற்காக ஆண்டுக்கு ரூ.500 கோடியை சித்தராமையா செலவு செய்துள்ளார். விளம்பரத்திற்காக இவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டுமா?.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.