கோபால்சுவாமி மலையில் வினோதம் கோவிலுக்கு தினமும் வந்து சாமியை வணங்கிவிட்டு செல்லும் காட்டுயானை


கோபால்சுவாமி மலையில் வினோதம் கோவிலுக்கு தினமும் வந்து சாமியை வணங்கிவிட்டு செல்லும் காட்டுயானை
x
தினத்தந்தி 8 Dec 2017 3:30 AM IST (Updated: 8 Dec 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

கோபால்சுவாமி மலையில், காட்டுயானை ஒன்று தினமும் கோவிலுக்கு வந்து சாமியை வணங்கிவிட்டு செல்லும் வினோத சம்பவம் நடந்து வருகிறது.

கொள்ளேகால்,

கோபால்சுவாமி மலையில், காட்டுயானை ஒன்று தினமும் கோவிலுக்கு வந்து சாமியை வணங்கிவிட்டு செல்லும் வினோத சம்பவம் நடந்து வருகிறது. மேலும் அந்த காட்டுயானை பக்தர்களிடமும் சாதுவாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.

கோவிலுக்கு வந்த காட்டுயானை

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவிற்கு உட்பட்டது கோபால்சுவாமி மலை. இந்த மலையில் வேணுகோபால் சாமி கோவில் உள்ளது. அந்த கோவிலில் வேணுகோபால் சாமி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த நிலையில் இக்கோவிலில் கடந்த 3 மாதங்களாக ஒரு வினோத சம்பவம் நடந்து வருகிறது.

அதாவது காட்டுயானை ஒன்று தினமும் இக்கோவிலுக்கு வந்து சன்னதிக்குள் சென்று தும்பிக்கையை உயர்த்தி வேணுகோபால் சாமியை வணங்கிவிட்டு, பின்னர் பிரசாதங்களை சாப்பிட்டுவிட்டு செல்கிறதாம். மேலும் அது கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரையும் தொந்தரவும் செய்வதில்லையாம். இந்த சம்பவம் குறித்து வருமாறு:–

அலறி அடித்து ஓட்டம்

கோபால்சுவாமி மலையில் அமைந்திருக்கும் வேணுகோபால் சாமி கோவில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலுக்கு தினமும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு காட்டுயானை திடீரென்று அந்த கோவிலுக்கு வந்தது.

அது மலையின் கீழிருந்து படிகள் வழியாக ஏறி கோவிலின் பிரதான நுழைவு வாயில் மூலமாக கோவிலுக்குள் வந்தது. பின்னர் அது சன்னதிக்குள் சென்று அங்கு வீற்றிருக்கும் வேணுகோபால் சாமியை, தும்பிக்கையை உயர்த்தி வணங்கியது. காட்டுயானையைப் பார்த்த பக்தர்களும், பூசாரிகளும் கோவிலில் இருந்து அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

3 மாதங்களாக...

ஆனால் காட்டுயானை யாரையும் தொந்தரவு செய்யவில்லை. மாறாக அது கோவில் வளாகத்தின் ஓரம் கிடந்த வாழை இலைகள், உணவுகள், பிரசாதங்களை தின்றுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது. இதனால் பக்தர்களும், பூசாரிகளும் நிம்மதி அடைந்தனர். ஆனால் அந்த காட்டுயானை மறுநாளும் வந்தது.

அப்போதும் அது யாரையும் தொந்தரவு செய்யாமல் வழக்கம்போல் கோவிலுக்குள் வந்து சாமியை வணங்கிவிட்டு பிரசாதங்களையும், உணவுகளையும் சாப்பிட்டுவிட்டு சென்றது. இவ்வாறாக அந்த யானை கடந்த 3 மாதங்களாக மாலை நேரத்தில் தினமும் கோவிலுக்கு வந்து செல்கிறது.

வினோதமாக உள்ளது

இந்த வினோத நிகழ்ச்சியை நேரில் பார்க்க தற்போது கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவர்கள் யானை வந்து செல்வதை ஓரமாக நின்று பார்வையிட்டு மகிழ்கிறார்கள். இதுகுறித்து கோவில் பூசாரி ஒருவர் கூறியதாவது:–

கோவில்கள் மற்றும் முகாம்களில் வளர்க்கப்படும் யானைகள்தான் இவ்வாறு சாதுவாக நடந்து கொள்ளும். மேலும் மனிதர்கள் சொல்வதை செய்யும். ஆனால் ஒரு காட்டுயானை தானாக கோவிலுக்கு வந்து சாமியை வணங்கிவிட்டு பிரசாதங்களை சாப்பிடுவதும், பக்தர்களிடம் சாதுவாக நடந்து கொள்வதும் வினோதமாக உள்ளது.

இதைப்பார்க்க மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த யானையின் வருகையால் தற்போது இக்கோவிலுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story