கருப்பாநதி அணைப்பகுதியில் கனமழை: கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு; 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
மேற்கு தொடர்ச்சி மலையில் கருப்பாநதி அணைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததால் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு
கடையநல்லூர்,
மேற்கு தொடர்ச்சி மலையில் கருப்பாநதி அணைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததால் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளத்தால் பாலம் உடைந்து தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
கனமழைநெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த வாரம் ஒகி புயலால் பலத்த மழை பெய்தது. இதனால் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, நம்பியாறு ஆகிய 6 அணைகள் நிரம்பி விட்டன.
இதற்கிடையே அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்தும் அதிகமாக உள்ளது. இன்னும் சில நாட்களில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, அடவிநயினார், வடக்கு பச்சையாறு அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது.
திடீர் வெள்ளப்பெருக்குஇதற்கிடையே நேற்று முன்தினம் இரவில் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் கடையநல்லூர் பகுதியில் கனமழை கொட்டி யது. குறிப்பாக கருப்பாநதி அணைப்பகுதியில் 192 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் அணைக்கு வினாடிக்கு 1,250 கன அடி தண்ணீர் வந்தது. ஏற்கனவே ஒகி புயலின்போது பெய்த மழையில் கருப்பாநதி அணை நிரம்பி இருந்தது. எனவே அணைக்கு வந்த 1,250 கன அடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது.
இந்த தண்ணீர் பெரியாறு தேவர் கால்வாய், பாப்பான் கால்வாய், வல்லவன் கால்வாய் ஆகிய கால்வாய்கள் வழியாக பாய்ந்தோடியது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் கால்வாய்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கால்வாய்களின் இருகரைகளையும் தொட்டபடி வெள்ள நீர் சென்றது.
ஊருக்குள் வெள்ளம் புகுந்ததுவல்லவன் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கடையநல்லூர் மதினா நகர் பகுதிக்குள் புகுந்தது. அங்குள்ள சுமார் 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பொறியாறு என்ற இடத்தில் சலவைக்காக தொழிலாளர்கள் வைத்திருந்த ஆயிரக்கணக்கான துணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அங்குள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தனர்.
தகவல் அறிந்த கடையநல்லூர் தாசில்தார் மாரியப்பன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தன், பாலாஜி மற்றும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்தனர். வெள்ளம் புகுந்த வீடுகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றி அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர். இதேபோல் பாப்பான் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி அருகில் அம்பேத்கர் நகரில் உள்ள வீடுகளை சூழ்ந்தது. அந்த வீடுகளில் இருந்தவர்களை தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
பாலம் உடைந்தது; தோட்டங்களில் தண்ணீர்தென்காசியை அடுத்த வடகரை பகுதியிலும் விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளம் அனுமன் நதியில் கலந்தது. இதனால் அனுமன் நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் அடவிநயினார் அணைக்கு செல்லும் வழியில் உள்ள ஒச்சாண்டான் கால்வாய் பாலம் பாதி அளவு உடைந்து விழுந்தது. கால்வாயிலும் உடைப்பு ஏற்பட்டது. கால்வாயில் வந்த வெள்ளம் அங்குள்ள தென்னை, வாழை தோட்டங்களுக்குள் புகுந்தது.
அதுமட்டும் அல்லாமல் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் நோயாளிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். தகவல் அறிந்த தென்காசி உதவி கலெக்டர் ராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து வெள்ளத்தில் தத்தளித்தவர்களை மீட்டனர். வடகரையை அடுத்த மேக்கரையிலும் காட்டாற்று வெள்ளம் அங்குள்ள தோட்டங்களில் பயிரிடப்பட்டு இருந்த மரவள்ளி கிழங்கு மற்றும் தென்னை மரங்களை சூழ்ந்து நின்றது.
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்குஇதேபோல் தென்காசி சுற்று வட்டார பகுதிகள் மற்றும் குற்றாலம் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவியில் நள்ளிரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனே சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நேற்று காலையில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று மாலை 5.30 மணி அளவில் ஐந்தருவியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
அணைகள் நிலவரம்பாபநாசம் அணைப்பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட அணைக்கு வினாடிக்கு 676 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 320 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று 112 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 408 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 132.22 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணைப்பகுதியில் 120 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணைக்கு 330 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 123 அடியாக உள்ளது.
156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 138 அடியாகவும், 49.20 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 46 அடியாகவும் உள்ளது. நிரம்பிய மற்ற அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
மழை விவரம்நேற்று காலை 8 மணி நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பதிவான மழை விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு:–
கருப்பாநதி–192, அடவிநயினார்–120, குண்டாறு–47, செங்கோட்டை–41, ஆய்க்குடி–36, தென்காசி–36, சிவகிரி–21, சங்கரன்கோவில்–11, ராமநதி–10, சேரன்மாதேவி–7, பாபநாசம்–4, கடனாநதி–1.