கர்நாடக பா.ஜனதா கட்சி உடைந்த வீடு காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பேட்டி


கர்நாடக பா.ஜனதா கட்சி உடைந்த வீடு காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பேட்டி
x
தினத்தந்தி 9 Dec 2017 2:45 AM IST (Updated: 9 Dec 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக பா.ஜனதா கட்சி உடைந்த வீடு என்று பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா கட்சி உடைந்த வீடு என்று பரமேஸ்வர் கூறினார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

தொலைவில் வைக்கப்படுவார்

கர்நாடக பா.ஜனதா உடைந்த வீடு. பா.ஜனதாவில் பேச்சு சுதந்திரம் இல்லை என்று அதே கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி உமேஷ் கட்டி கூறி இருக்கிறார். உமேஷ் கட்டி காங்கிரசில் சேருவது தொடர்பாக என்னிடம் எதுவும் பேசவில்லை. அவர் முதல்–மந்திரியிடம் பேசி இருக்கலாம். அதுபற்றி எனக்கு தெரியாது.

ஒருவேளை அவர் எங்கள் கட்சிக்கு வருவதாக இருந்தால், பெலகாவி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டு அறிவோம். பா.ஜனதாவில் கர்நாடக ஜனதா என்ற கோஷ்டி உள்ளது. சட்டசபை தேர்தலில் எடியூரப்பாவை பயன்படுத்தி கொண்டு அவர் தொலைவில் வைக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் வெற்றி பெறும்

நான் பிரசாரம் செய்வதற்கான வாகனம் தயாராகியுள்ளது. கொரட்டகெரே தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். கடந்த முறை நான் எனது தொகுதியில் அதிக கவனம் செலுத்தி பிரசாரம் செய்யவில்லை. அதனால் தோல்வியை தழுவினேன். இந்த முறை ஆரம்பத்திலேயே அங்கு பிரசாரம் செய்வேன். குஜராத் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று சொல்கிறார்கள்.

ஆனால் கடும் போட்டி எழுந்துள்ளதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன. கருத்து கணிப்புகள் எதுவாக இருந்தாலும் குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறுவது உறுதி. அதனால் எதிர்க்கட்சிகளுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் எங்கள் கட்சி தலைவர்களின் சுற்றுப்பயணம் குறித்து விமர்சனம் செய்கிறார்கள்.

ரூ.50 கோடி செலவு

முதல்–மந்திரியின் அரசு நிகழ்ச்சிகளை நடத்த ரூ.50 கோடி செலவு செய்யப்படுவதாக கூறுவதில் உண்மை இல்லை. முதல்–மந்திரிக்கு மாலை அணிவிப்பதற்கு ஆகும் செலவை எல்லாம் கணக்கில் சேர்த்துக் கொண்டால் எப்படி?. இதற்கு முன்பு வளர்ச்சி பணிகளை சித்தராமையா தொடங்கி வைக்கவில்லையா?.

சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் பிரசார உரைகள், வாகனங்கள் மூலம் பிரசாரம் செய்ய ரிஸ்வான் எம்.எல்.சி. முடிவு செய்துள்ளார். எங்கள் கட்சியை சேர்ந்த முனிரத்னா எம்.எல்.ஏ. விலகுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அவர் சிறப்பாக பணியாற்றியுள்ளார். எதற்காக அவர் கட்சியை விட்டு விலக வேண்டும்?.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.


Next Story