தொடர் விபத்தை தடுக்க நான்கு வழிச்சாலையில் தடுப்புகள்
கொட்டம்பட்டி அருகே தொடர் விபத்தை தடுக்க நான்கு வழிச்சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.
கொட்டாம்பட்டி,
மதுரை–திருச்சி நான்கு வழிச்சாலையில் கொட்டாம்பட்டி அருகே உள்ளது கருங்காலக்குடி. இந்த ஊரின் இரு பகுதியிலும் 50–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு மேம்பாலம் கட்டப்படாததால் கிராம மக்கள் இந்த நான்கு வழிச்சாலையின் குறுக்கே நடந்துதான் தங்கள் பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்த சாலையில் அதிக அளவில் வாகனங்கள் செல்வதால் சில நேரங்களில் சாலையை கடக்குபோது கிராமமக்கள் வாகனங்களில் அடிபட்டு பலியாகும் பரிதாப நிலை உள்ளது. இதுவரை 50–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியாகினர். விபத்துக்கு காரணமான கார் ஒன்றை மக்கள் தீ வைத்து கொளுத்திய சம்பவமும் நடைபெற்றது. இந்த இடத்தில் நடக்கும் தொடர் விபத்துக்களை தடுக்க வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் சாலை தடுப்பு வைக்க வேண்டும் எனவும், அந்த பகுதியில் இருளை போக்க மின்விளக்கு கோபுரம் அமைக்கவேண்டும் எனவும் கிராமமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
மேலும் கருங்காலக்குடியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் விபத்துகளை தடுக்க கருங்காலக்குடியில் உயர் கோபுர மின்விளக்கு மற்றும் சாலை தடுப்பு அமைக்க வேண்டும் என வணிகர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். இதன்தொடர்ச்சியாக மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சக்கரவர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய் மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள் விரைவான நடவடிக்கை மேற்கொண்டு கருங்காலக்குடியில் விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை தடுப்பு அமைத்தனர். இதனால் விபத்துக்கள் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.