செல்போன் பேசியதை கணவர் கண்டித்ததால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
செல்போன் பேசியதை கணவர் கண்டித்ததால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சோமரசம்பேட்டை,
திருச்சி–திண்டுக்கல் சாலை சத்திரப்பட்டி அருகே உள்ள இனாம்மாத்தூர் ஊராட்சியை சேர்ந்தவர் வேலுச்சாமி(வயது30). பிளம்பிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா(21). இவரது சொந்த ஊர் உத்தமர்சீலி. இவர்களுக்கு கடந்த 2ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் காலை வேலை விஷயமாக வேலுச்சாமி திருச்சிக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார்.
அப்போது ஐஸ்வர்யா செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தாராம். யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாய், என வேலுச்சாமி கேட்டதற்கு எனது அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தேன் என்று ஐஸ்வர்யா பதில் அளித்துள்ளார். இதை வேலுச்சாமி நம்பாததால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நேற்று காலை எழுந்ததும், செல்போனில் பேசியது தொடர்பாக கணவன்–மனைவிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கண்டு வேலுச்சாமியின் அண்ணன் இருவரையும் சமாதானம் செய்து வைத்தார். பிறகு வேலுச்சாமி கடைத்தெரு பக்கம் சென்று விட, கதவை தாழ்ப்பாள் போட்டுகொண்டு மின்விசிறியில் சேலையால் ஐஸ்வர்யா தூக்கு போட்டு கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து கதவை உடைத்து தூக்கில் தொங்கிய ஐஸ்வர்யாவை கீழே இறக்கி திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராம்ஜிநகர் இன்ஸ்பெக்டர் முகமதுஇத்ரீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஐஸ்வர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுபற்றி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். ஐஸ்வர்யாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.