லட்சத்தீவு பகுதிகளில் கரை ஒதுங்கிய 45 தமிழக மீனவர்கள் கேரளா வந்தனர்
லட்சத்தீவு பகுதிகளில் கரை ஒதுங்கிய 45 தமிழக மீனவர்கள் கேரளா வந்தனர். அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
நாகர்கோவில்,
‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்டு கேரள மாநில கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்டு, பாதுகாப்பாக தமிழகத்திற்கு அழைத்து வருவதற்காக, தமிழக முதல்–அமைச்சரின் உத்தரவுப்படி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் அருண்ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஒகி புயலினால் பாதிக்கப்பட்டு, லட்சதீவு கவரட்டி பகுதியில் கரை ஒதுங்கிய தமிழகத்தை சேர்ந்த 45 மீனவர்கள் அனைவரும் கப்பல் மூலம் நேற்று காலை 10.30 மணியளவில் பாதுகாப்பாக கொச்சி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கொச்சி வந்தடைந்துள்ள இந்த மீனவர்கள் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
கொச்சி துறைமுகம் வந்தடைந்துள்ள மீனவர்களை, அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் அருண்ராய் தலைமையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்களது சொந்த மாவட்டங்களுக்கு சென்றடைய ஏதுவாக 3 தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மீனவர்கள் அனைவருக்கும் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகையும், மருத்துவ பரிசோதனை, உணவு வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.