தூத்துக்குடியில் ஒகி புயலில் சிக்கி உயிர் இழந்த மீனவர் உடல் அடக்கம்


தூத்துக்குடியில் ஒகி புயலில் சிக்கி உயிர் இழந்த மீனவர் உடல் அடக்கம்
x
தினத்தந்தி 10 Dec 2017 2:30 AM IST (Updated: 9 Dec 2017 11:58 PM IST)
t-max-icont-min-icon

ஒகி புயலில் சிக்கி உயிர் இழந்த மீனவரின் உடல் தூத்துக்குடியில் அடக்கம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி,

ஒகி புயலில் சிக்கி உயிர் இழந்த மீனவரின் உடல் தூத்துக்குடியில் அடக்கம் செய்யப்பட்டது.

ஒகி புயல்

ஒகி புயலால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சேதம் ஏற்பட்டது. கடலில் மீன் பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் புயலில் சிக்கி மாயமானார்கள். இதில் பலர் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் புயலுக்கு முன்பாக கடந்த 28–ந் தேதி கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தங்கு கடலுக்கு சென்ற தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்களின் உடல்கள் கேரள மாநில கடலோர பகுதிகளில் கரை ஒதுங்கியதாகவும், 10–க்கும் மேற்பட்ட உடல்கள் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர்களின் உடல்கள் சிதைத்து இருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து மரபணு சோதனை செய்யப்பட்டது.

இதில் தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு மீனவர் காலனியை சேர்ந்த ஜூடு (வயது 42) என்பவரது உடல் மரபணு சோதனையில் அடையாளம் காணப்பட்டு, நேற்று முன்தினம் இரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உடல் அடக்கம்

நேற்று அதிகாலை 3 மணிக்கு ஜூடுவின் உடல் தூத்துக்குடிக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு வரப்பட்டது. ஜூடுவின் உடலை பார்த்து மனைவி சுதா), உறவினர்கள் பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து மீனவ மக்கள் பலர் ஜூடுவின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். 3.40 மணிக்கு தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியில் உள்ள மையவாடியில் ஜூடு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் புயலில் சிக்கி மாயமான தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு மீனவர் காலனியை சேர்ந்த மீனவர்கள் ஜோசப் (60), ரவீந்திரன், பாரத் (18), கினிஸ்டன் (48) ஆகியோரின் நிலைமை இன்னும் தெரியவில்லை. அவர்களை உடனடியாக மீட்டு தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். இதில் பாரத் என்பவர் இறந்த ஜூடுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story