காட்டு யானை தூக்கி வீசியதில் பெண் படுகாயம்


காட்டு யானை தூக்கி வீசியதில் பெண் படுகாயம்
x
தினத்தந்தி 10 Dec 2017 4:15 AM IST (Updated: 10 Dec 2017 1:17 AM IST)
t-max-icont-min-icon

பெரியநாயக்கன்பாளையம் அருகே காட்டு யானை தூக்கி வீசியதில் பெண் படுகாயம் அடைந்தார்.

இடிகரை,

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை, தோலாம்பாளையம் வனப் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. அவை, உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தும், விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் தோலாம்பாளையம் நீலம்பதி கிராமத்தில் காட்டுயானை ஒன்று புகுந்தது. இது குறித்து அந்த பகுதி மக்கள் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் அங்குள்ள திருமூர்த்தி என்பவரின் வீட்டிற்குள் காட்டு யானை புகுந்தது. அது அங்குள்ள சமையல் அறையில் இருந்த அரிசியை தின்றும், வெளியே தூக்கி வீசியும் அட்டகாசம் செய்தது.

அப்போது திருமூர்த்தியின் மனைவி கண்ணம்மாள் (வயது 52) வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அவர் யானை நிற்பதை கவனிக்காமல் வீட்டின் உள்ளே சென்றார். அங்கு காட்டு யானை நிற்பதை பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்து தப்பி ஓட முயன்றார்.

ஆனால் அதற்குள் அந்த காட்டு யானை அவரை விரட்டிச் சென்று துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். வேதனையால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், அந்த யானையை வனப் பகுதிக்குள் விரட்டினர். மேலும் அந்த காட்டு யானை மீண்டும் ஊருக்குள் புகாமல் இருக்க வனத்துறை மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு யானை தாக்கி பெண் படுகாயம் அடைந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story