கள்ளக்காதலை வெளியே சொன்னதால் கொலை செய்தோம் பெண் உள்பட 3 பேர் கைது


கள்ளக்காதலை வெளியே சொன்னதால் கொலை செய்தோம் பெண் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Dec 2017 7:00 AM IST (Updated: 10 Dec 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

சூலூரில் நடந்த இரட்டை கொலையில் பெண் உள்பட 3 பேர் கைது கள்ளக்காதலை வெளியே சொன்னதால் கொலை செய்ததாக கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சூலூர்,

கோவை மாவட்டம் சூலூரில் கடந்த 4-ந் தேதி மதுரையை சேர்ந்த சிவசக்தி மற்றும் சீனிவாசன் ஆகிய கட்டிட தொழிலாளர்கள் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார் விசாரணை நடத்தினர். சம்பள பண விவகாரத்தில் இந்த கொலைகள் நடைபெற்றதாக முதலில் கூறப்பட்டது.

போலீசாரின் தீவிர விசாரணையில் திடீர் திருப்பமாக கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலைகள் நடந்தது என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மதுரையை சேர்ந்த முருகன் அவருடைய தம்பி ஆண்டிசெல்வம் மற்றும் அவர்களுடன் சேர்ந்து கட்டிட வேலை செய்த சோலைராஜ் மற்றும் அவருடைய மனைவி முனீஸ்வரி என்கிற ஆனந்தவள்ளி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் முனீஸ்வரியை தஞ்சை ரெயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோவைக்கு அழைத்து வந்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நானும் என்னுடைய கணவர் சோலைராஜும், முருகன் என்பவரிடம் கட்டிட வேலை செய்து வந்தோம். அப்போது எனக்கும் முருகனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதன்காரணமாக நாங்கள் இரண்டு பேரும் நெருக்கமாக இருந்து வந்தோம். இந்த கள்ளக்காதல் விவகாரம் முருகனிடம் வேலை செய்து வந்த சிவசக்திக்கு எப்படியோ தெரிந்துவிட்டது.

இதை தொடர்ந்து சிவசக்தி அவருடன் வேலை செய்து வந்த சீனிவாசன், பாண்டி ஆகியோரிடம் எங்களது கள்ளக்காதலை கூறிஉள்ளார். மேலும், அதுபற்றி அங்கு வேலை செய்து வரும் பலரிடம் கூறியுள்ளனர். இதனால் எனக்கு அவமானம் ஏற்பட்டது.அவர்களை பழிவாங்க திட்டமிட்ட நான், சிவசக்தி, சீனிவாசன், பாண்டி ஆகியோர் என்னை தவறாக பேசிவருவதாக கணவரிடம் கூறினேன். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கொலை செய்ய திட்டமிட்டோம். அதற்கு துணையாக முருகனின் தம்பி ஆண்டிச்செல்வத்தை ஊரில் இருந்து வரவழைத்தோம்.

பின்னர் கடந்த 4-ந் தேதி சிவசக்தி, சீனிவாசன் மற்றும் பாண்டி ஆகியோர் சூலூர் கலங்கல் பாதையில் உள்ள மதுக்கடையில் மது குடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு சென்ற என்னுடைய கணவர் சோலைராஜ், முருகன், ஆண்டிசெல்வம் ஆகியோர் சிவசக்தியுடன் தகராறு செய்தனர். அப்போது எங்களது கொலை திட்டத்தை தெரிந்து கொண்ட சிவசக்தி அங்கிருந்து தப்பி சூலூர் டவுன் பகுதிக்குள் சென்று விட்டார்.

இதையடுத்து அவரை பின் தொடர்ந்து சிவசக்தியை கொலை செய்வதற்கு தயாராக இருந்தோம். சிவசக்தி, சீனிவாசன் மற்றும் பாண்டி ஆகிய 3 பேரும் சூலூர் கருப்பண்ண தேவர் வீதியில் ஒன்றாக வந்து கொண்டு இருந்தனர். அப்போது தயாராக இருந்த முருகன், ஆண்டிச்செல்வம், சோலைராஜ் ஆகியோர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவர்கள் 3 பேரையும் கத்தியால் குத்தினார்கள். இதில் பாண்டி படுகாயத்துடன் தப்பினார். மற்ற 2 பேர் இறந்துவிட்டனர்.

பின்னர் கணவருடன் நான் சொந்த ஊருக்கு சென்று விட்டேன். மேலும் போலீசார் எங்களை தேடியதை அறிந்தோம். உடனே தஞ்சாவூருக்கு சென்றேன். அப்போது அங்குள்ள ரெயில்நிலையத்தில் நின்ற என்னை போலீசார் பிடித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே முருகனின் தம்பி ஆண்டிசெல்வத்தை திருப்பூரில் வைத்து நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சோலைராஜ் (35) என்பவர், திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் நீதிபதி அச்சுதன் முன்னிலையில் சரண் அடைந்தார்.

அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, வருகிற 13-ந் தேதி வரை சோலைராஜை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் சோலைராஜை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கொலை தொடர்பாக முருகனை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story