வழிபாட்டு தலத்தை எதிர்த்து இந்து முன்னணியினர் சாலை மறியல் மாநில செயலாளர் உள்பட 50 பேர் கைது
அருமனை அருகே வழிபாட்டு தலத்தை எதிர்த்து இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாநில செயலாளர் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
அருமனை,
அருமனை அருகே கடையாலுமூடு, ஆஞ்சோலையில் ஒரு வழிபாட்டு தலம் உள்ளது. இது அனுமதியின்றி செயல்படுவதாக இந்து முன்னணியினர் சார்பில் அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி வந்தனர்.
இதையடுத்து நேற்று காலையில் அங்கு வழிபாடு நடந்து கொண்டிருந்த போது, இந்து முன்னணியை சேர்ந்த சிலர் அங்கு சென்றனர். அங்கு வழிபாட்டு தலத்தின் வாயிலில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இதுகுறித்து கடையாலுமூடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருதரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி மாநில செயலாளர் செல்லன், மாவட்ட தலைவர் மிசா சோமன் உள்பட நிர்வாகிகள் பலர் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பிரச்சினைக்குரிய வழிபாட்டுதலம் அனுமதியின்றி செயல்படுவதாகவும், இதுதொடர்பாக வருவாய்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், களியல் சந்திப்பில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
உடனே, போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் செல்லன், மாவட்ட தலைவர் மிசா சோமன் உள்பட 50 பேரை கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.