கடல் அரிப்பால் அழிந்து வரும் மீனவ கிராமங்கள்


கடல் அரிப்பால் அழிந்து வரும் மீனவ கிராமங்கள்
x
தினத்தந்தி 11 Dec 2017 5:15 AM IST (Updated: 11 Dec 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூர் முதல் எண்ணூர் வரை கடல் அரிப்பால் மீனவ கிராமங்கள் அழிந்து வருகின்றன. முற்றிலும் அழியும் முன் நடவடிக்கை எடுக்க அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருவொற்றியூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் தொகுதியில் கடற்கரை பகுதிகளான திருவொற்றியூர் நல்லதண்ணீர் ஓடைக்குப்பம், திருச்சிணாங்குப்பம், ஒண்டிக்குப்பம், பலகை தொட்டி குப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம், முகத்துவாரகுப்பம் என எண்ணூர் நெட்டுக்குப்பம் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு 22 மீனவ கிராமங்கள் உள்ளன.

இங்கு சுமார் 40 ஆயிரம் மீனவர்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலான மீனவர்கள், மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீனவ பெண்களும் மீன் விற்பனை செய்தல் மற்றும் அதனை சார்ந்த தொழிலையே செய்து வருகின்றனர்.

தற்போது 4 ஆயிரம் மீனவர்கள் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம் முதல் எண்ணூர் நெட்டுக்குப்பம் வரை நேரிடையாக 1,167 சிறிய, பெரிய வகை பைபர் படகுகளில் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

மீதம் உள்ள மீன்பிடி தொழில் செய்பவர்கள், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் சென்று கடலில் தங்கி இருந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

திருவொற்றியூர் முதல் எண்ணூர் வரை பரந்து விரிந்த கடற்கரையுடன் காணப்பட்ட இந்த மீனவ கிராமங்கள், கடந்த 30 ஆண்டுகளில் கடல் அரிப்பால் அழிந்து வருகின்றன. கடல் அரிப்பால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை மீனவ கிராமங்களுக்குள் வரும் கடல் அலை, மீனவர்களின் வீடுகளை விழுங்கி வருகிறது.

இதனால் ஆயிரக்கணக்கான மீனவர்கள், தங்கள் வீடுகளை இழந்து வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்து சென்று விட்டனர். தற்போது எண்ணூர் விரைவு சாலையோரம் வசித்து வரும் மீனவ கிராமங்களும் கடல் அரிப்பால் சுருங்கி கொண்டே வருகிறது.

மீனவ கிராமங்கள் முற்றிலும் அழிந்து போகும் முன்பாக அவற்றை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த மீனவர் சித்திரை என்பவர் கூறியதாவது:–

சென்னை துறைமுகம், எண்ணூர் துறைமுகம் விரிவாக்கப்பணிகள் காரணமாகவும், இயற்கை சீற்றத்தாலும் கடல் அரிப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மீனவர்களின் வீடுகள் கடலுக்குள் சென்றுவிட்டது. கடல் அரிப்பை தடுக்க அரசு சார்பில் ராட்சத பாராங்கற்களை கொட்டி கடல் அரிப்பு தடுப்பு சுவர் எழுப்பி உள்ளனர்.

மொத்தம் 14 இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைத்து கொடுத்து உள்ளனர். அதில் ஒரு இடத்தில் 200 மீட்டரும், மற்றொரு இடத்தில் 100 மீட்டர், 50 மீட்டர் என பெயரளவுக்கு கடலின் நடுவே தடுப்பு சுவர் எழுப்புவது போல் ராட்சத பாராங்கற்களை கொட்டி அமைத்து உள்ளதால் அவை நிரந்தரமானதாக இல்லை.

இந்திராகாந்தி நகர், காசிகோவில்குப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இதுவரை தூண்டில் வளைவுகள் அமைத்து கொடுக்கப்படவில்லை. இதனால் அந்த மீனவ கிராமங்கள், இயற்கை சீற்றம் ஏற்படும்போது கடலுக்குள் செல்லும் அபாயம் உள்ளது.

எனவே தற்போது உள்ளது போல் பெயரளவுக்கு அமைக்காமல், முறைப்படி தூண்டில் வளைவுகள் அமைத்து கொடுத்து மீனவர்களின் உடமைகளையும், உயிரையும் காப்பாற்ற அரசு முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது ஒருபுறம் இருக்க, மீனவர்களின் வாழ்வாதாரமும் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகின்றது. இது குறித்து திருச்சிணாங்குப்பத்தை சேர்ந்த லோகு என்ற மீனவர் கூறியதாவது:–

திருவொற்றியூர், எண்ணூர் கடலோர பகுதியில் இருந்து பைபர் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், அதிகாலை 3 மணியளவில் கடலுக்குள் சென்றுவிட்டு மதியத்துக்குள் வீடு திரும்பி விடுவோம். அன்று பிடிக்கும் மீன்களை அன்றே விற்று விடுவோம்.

ஏற்கனவே எண்ணூர், வடசென்னை அனல்மின் நிலையங்களில் இருந்து சாம்பல் கழிவுகளுடன் சுடு நீரை ஆற்றில் விடுவதாலும், ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கடலில் கலப்பதாலும் கடலும், ஆறும் கலக்கும் எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் மணல் மேடுகளாகி விட்டதால் அந்த பகுதியில் கிடைக்கும் அரிய வகை நண்டு, எறால் இனம் முற்றிலும் அழிந்துவிட்டது. மீன் இனப்பெருக்கமும் குறைந்து விட்டது.

கடந்த வருடம் பருவமழை பொய்த்து விட்டதால் மழைநீர் ஆறுகள் மூலம் கடலில் கலக்காததால் பல்லுயிர் பெருக்கம் குறைந்துவிட்டது. கடல்நீரின் அடர்த்தி அதிகமாகிவிட்டதால் மீன் உற்பத்தி குறைந்துவிட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் 15–ந் தேதி எண்ணூர் துறைமுகம் அருகே எம்.டபிள்யூ.மாப்பின் என்ற கப்பலும், டான் காஞ்சீபுரம் என்ற கப்பலும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கப்பலில் இருந்து வெளியேறி கடலில் படர்ந்த எண்ணெய் படலத்தால் இன்னும் அந்த பகுதியில் மீன்கள் கிடைக்கவில்லை.

இதனால் காலங்காலமாக மீன் பிடிதொழில் செய்து வந்த மீனவர்கள், கடலில் மீன் கிடைக்காததால் மீன் பிடி தொழிலை விட்டு விட்டு வேறு பிழைப்பு தேடி பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டனர்.

புயல், மழை காலங்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அரசு எச்சரித்து வருகின்றது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத காலத்தில் எங்கள் கதி அதோ கதிதான். முறையாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல மீன்பிடி தளம் இல்லாததால் கடலுக்குள் செல்லும் போதும், திரும்பி வரும்போதும் படகு கவிழ்ந்து, படகுகள் சேதமடைவதுடன் உயிர் பலியும் ஏற்படுகின்றது.

எனவே கரையில் இருந்து பைபர் படகுகளில் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வர மீன்பிடி தளம் அமைத்து கொடுக்க வேண்டும். அனல் மின்நிலைய சாம்பல் கழிவுகளை கொட்டுவதை தடைசெய்ய வேண்டும். ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து கடலுக்குள் விட வேண்டும்.

முகத்துவார பகுதியில் உள்ள மணல் மேடுகளை அகற்றி மீன் உற்பத்தியை பெருக்கி மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க சம்பந்தபட்ட துறையும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story