ஏ.டி.எம். எந்திரத்தில் வெல்டிங் மூலம் துளைபோட்டு ரூ.3¼ லட்சம் கொள்ளை


ஏ.டி.எம். எந்திரத்தில் வெல்டிங் மூலம் துளைபோட்டு ரூ.3¼ லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 11 Dec 2017 4:30 AM IST (Updated: 11 Dec 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஏ.டி.எம். எந்திரத்தில் வெல்டிங் மூலம் துளை போட்டு ரூ.3¼ லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். இதில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவையில் கடந்த சில நாட்களாக ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கிராஸ்கட் சாலை, நஞ்சப்பா சாலை, போத்தனூர் ஆகிய பகுதிகளில் இருந்த ஏ.டி.எம்.களை உடைத்து பணத்தை திருட முயன்ற சம்பவங்கள் நடைபெற்றன. இதில் கிராஸ்கட் சாலையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றதாக 2 பேரும், போத்தனூரில் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கோவை விளாங்குறிச்சி தண்ணீர் பந்தல் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து விட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா, துணை கமிஷனர் லட்சுமி ஆகியோரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

இதில் ஏ.டி.எம். மையத்துக்குள் மர்ம ஆசாமிகள் புகுந்து ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்தை கொள்ளை யடித்து சென்றது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு படிந்திருந்த கைரேகைகளை பதிவுசெய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. இது குறித்து பீளமேடு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

இதில், கோவை தண்ணீர்பந்தல் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம். நேற்று அதிகாலை 2 மணி வரை செயல்பட்டு உள்ளது. கொள்ளை நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு வரை அதில் பொதுமக்கள் பணம் எடுத்து உள்ளனர். இந்த நிலையில் அதிகாலை 2.15 மணி அளவில் அந்த ஏ.டி.எம். முன்பு ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய 4 பேர் ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் உள்ளே சென்றதும் கண்காணிப்பு கேமராவின் வயரை துண்டித்தனர்.

பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இருக்கும் பகுதியை கியாஸ் வெல்டிங் மூலம் துளையிட்டனர். அதில் கை விடும் அளவிற்கு துளை ஏற்படுத்திய பின்னர் அதில் இருந்த ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் எடுத்துள்ளனர்.

இதையடுத்து அதற்கு கீழ் இருந்த டிரேயில் இருந்த பணத்தையும் எடுப்பதற்காக கியாஸ் வெல்டிங் மூலம் துளையிட்டுள்ளனர். அதற்கு நீண்ட நேரம் ஆனதால் கொள்ளையர்கள் உடனே அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஏ.டி.எம். எந்திரத்தில் 100, 500, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தனித்தனியாக சிறிய சிறிய டிரேக்களில் வைக்கப்பட்டிருக்கும். அதில் பணம் வைக்கப்பட்டுள்ள டிரே தடிமனான இரும்பினால் ஆனது. இதனால் கியாஸ் வெல்டிங் மூலம் அந்த பெட்டியை துளையிடுவதற்கு நீண்ட நேரம் ஆகும். கொள்ளை யர்கள் ஒரு டிரேயை மட்டும் துளையிட்டு அதில் இருந்த ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை மட்டும் எடுத்துள்ளனர். அதன் அருகில் இருந்த மற்றொரு டிரேயை துளையிட முடியாததால் அதில் இருந்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தப்பின.

கொள்ளையர்கள் நன்கு திட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளனர். அதிகாலை 2.15 மணியளவில் காரில் வந்த கொள்ளையர்கள் தங்களுடன் கியாஸ் சிலிண்டரையும் எடுத்து வந்துள்ளனர். அதன் மூலம் வெல்டிங் செய்து துளையிட்டுள்ளனர். கொள்ளையர்கள் 30 முதல் 50 நிமிடம் வரை அந்த மையத்தில் இருந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அதற்கு மேல் இருந்தால் மற்றவர்களுக்கு தெரிந்து விடும் என்பதால் கொள்ளையர்கள் தப்பியுள்ளனர். அப்போது கியாஸ் சிலிண்டர் மற்றும் வெல்டிங் எந்திரத்தையும் எடுத்துச்சென்று விட்டனர்.

கொள்ளையர்கள் காரில் வருவது, ஏ.டி.எம். மையத்துக்குள் நுழையும் காட்சிகள் அருகில் உள்ள ‘டைடல் பார்க்’ கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதை வைத்து கொள்ளையர்கள் யார்? அவர்கள் வந்த காரின் பதிவு எண் என்ன? என்பன போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து கோவை பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஏ.டி.எம். மையம் அருகே உள்ள கடைகள், ஓட்டல் ஊழியர்களிடம் சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரும் காரில் வந்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். கோவையில் இதற்கு முன்பு ஏ.டி.எம், எந்திரத்தை உடைக்க முயன்ற சம்பவங்கள் தான் நடைபெற்றன. ஆனால் பீளமேட்டில் நடந்த சம்பவத்தில் தான் ஏ.டி.எம். எந்திரத்தை வெல்டிங் மூலம் துளையிட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story