ஒகி புயலில் சிக்கிய மீனவர்களுக்கு நிவாரணம் அமைச்சர் கந்தசாமி உறுதி
ஒகி புயலில் சிக்கிய புதுச்சேரி மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி உறுதியளித்தார்.
புதுச்சேரி,
ஒகி புயலின்போது கேரளாவில் தங்கி மீன்பிடித்து வந்த நரம்பை பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆறுமுகம் (50), மணிகண்ட பிரபு (23), அருள்ராஜ் (25), கந்தநாதன் (25), ஆனந்து (30) ஆகிய 5 பேர் கடல் சீற்றத்தால் திசைமாறி லட்சத்தீவுக்கு சென்று மாட்டிக்கொண்டனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தற்போது புதுச்சேரி அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அவர்கள் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அமைச்சர் கந்தசாமி நேற்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவ கண்காணிப்பாளர் மோகன்குமார், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் ரவி ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
கடலில் மீன்பிடிக்க சென்றபோது ஒகி புயலின்போது நமது மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் லட்சத்தீவில் மாட்டிக்கொண்டனர். அவர்களை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருடன் பேசி மீட்டுக்கொண்டு வந்துள்ளோம்.
அவர்கள் 10 நாட்களுக்கு மேலாக கடலிலேயே இருந்ததால் உடல் சோர்வாக இருப்பதாக கூறுகின்றனர். அவர்களுக்கு தற்போது உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் ஆகியோருடன் பேசி உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.