இந்துமகா சபா சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரிக்கை


இந்துமகா சபா சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரிக்கை
x
தினத்தந்தி 12 Dec 2017 4:15 AM IST (Updated: 11 Dec 2017 11:16 PM IST)
t-max-icont-min-icon

‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் இந்துமகா சபா, த.மா.கா. சார்பில் மனு அளிக்கப்பட்டது.

நாகர்கோவில்,

வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் திங்கட்கிழமையான நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கூட்டத்தில் அதிகாரிகள், பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினர். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

மேலும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில், புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மனு கொடுக்கப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:–

அகில பாரத இந்துமகா சபா சார்பில் மாநில தலைவரும், தென்னிந்திய அமைப்புச் செயலாளருமான த.பாலசுப்பிரமணியன் தலைமையில் ஏராளமானோர் மனு கொடுத்தனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் தென்னை, வாழை, கமுகு, மா, பலா, புளி மற்றும் விவசாய பயிர்களும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. புயலால் சேதம் அடைந்த செவ்வாழை ஒன்றுக்கு ரூ.600 வீதமும், பிறவாழை ஒன்றுக்கு ரூ.500 வீதமும், கமுகு மரம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதமும், தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் வீதமும், ரப்பர் மரம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் வீதமும், புளியமரம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதமும், தேக்கு மரம் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வீதமும், பலா மரம் மற்றும் மாமரம் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வீதமும், பப்பாளி மரம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதமும், நெற்பயிர் மற்றும் பணப்பயிர்களுக்கு அதன் பலன் அடிப்படையில் குறைந்தபட்சமாக ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வீதமும் நிவாரணம் வழங்க வேண்டும்.

மீனவர், விவசாயி என்ற பாகுபாடு பார்க்காமல் புயல் பாதிப்பால் இறந்துபோன அனைவருக்கும் குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

த.மா.கா. மாநில விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையில் குமரி மாவட்ட த.மா.கா. நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் கரை சேர்ந்துள்ள மீனவர்களை குமரி மாவட்டத்துக்கு தமிழக அரசு அழைத்து வரவேண்டும். கடலில் மாயமான மீனவர்களை கண்டுபிடித்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். கடலில் இறந்து போன மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் 5 லட்சம் ரப்பர் மரங்களும், 12 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட 1½ லட்சம் வாழைகளும், 3 ஆயிரம் ஏக்கர் தென்னை, மா, பலா மரங்களும், 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களும் நாசமாகி உள்ளன. அரசு முறையாக கணக்கெடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் ஆண்களும், பெண்களுமாக ஏராளமானோர் மனு கொடுத்தனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

ஒகி புயலால் குமரி மாவட்டம் பெரும் சேதமடைந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஒகி புயல் நிவாரணமாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். காணாமல் போன மீனவர்கள் அனைவரையும் போர்க்கால அடிப்படையில் தேடுதல் நடத்த வேண்டும். ஒகி புயலில் இறந்துபோன அனைத்து குடும்பத்தினருக்கும் கேரளா அரசைப்போல ரூ.25 லட்சமும், அரசு வேலையும் வழங்க வேண்டும். சேதமடைந்த விவசாய பயிர்களுக்கு முறையான, தேவையான நஷ்டஈடு வழங்க வேண்டும். ஒகி புயல் பாதிப்புக்கு முழு நிவாரணம் வழங்க ரூ.1500 கோடியை மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து பெற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

குமரி மாவட்ட வளர்ச்சி இயக்க மாவட்ட தலைவர் முருகதாஸ் தலைமையில் பலர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

குமரி மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவித்து நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒகி புயலால் உயிரிழந்த அனைத்து தரப்பினருக்கும் பாரபட்சமற்ற, ஒரேவிதமான இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்தோருக்கும் பாரபட்சமற்ற ஒரேவிதான நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து விதமான விவசாய கடன்களையும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர் இழப்புகளை ஆய்வு செய்து பயிர்களின் தன்மைக்கேற்ற அதிகபட்ச நிவாரணம் வழங்கப்படல் வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் குமரி மாவட்ட தலைவர் டேவிட்சன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

நாகர்கோவில் மீனாட்சிபுரம் தோப்புவணிகர் தெருவை சேர்ந்த சங்கரன் (வயது 55) என்பவர் கடந்த 3–ந் தேதி துணி வியாபாரம் நிமித்தமாக கன்னியாகுமரி சென்றுவிட்டு நாகர்கோவிலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் மனைவியோடு வரும்போது துணை முதல்–அமைச்சரின் பாதுகாவலுக்காக சென்ற போலீஸ் வாகனம் மோதி படுகாயம் அடைந்து, 4 நாட்களுக்குப்பின் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிர் இழந்தார். அவருடைய மனைவி காயம்பட்ட நிலையில் உள்ளார். சங்கரனின் சிறு வியாபாரத்தில் வாழ்ந்து வந்த குடும்பம் இன்று ஆதரவற்ற சூழ்நிலையில், இரு குழந்தைகளோடு வாழவழியின்றி நிற்கிறது. எனவே முதல்–அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்கவும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும் முதல்–அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யு.) மாவட்ட தலைவர் அலெக்சாண்டர், பொதுச்செயலாளர் அந்தோணி, தனீஷ், கோவளம் ஊர் துணைத்தலைவர் பயஸ், செயலாளர் பிளாசியுஸ், துணை செயலாளர் கிளைப்பாஸ், பொருளாளர் ததேயுஸ் மற்றும் கோவளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

கோவளம் ஊரைஅடுத்து கிழக்கு பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தை மீன்களை உலர வைக்கவும், மீன்பிடி உபகரணங்களைபோடவும் பயன்படுத்தி வந்தோம். அதில் 50 சென்ட் இடத்தில் போலீஸ் நிலையம் அமைக்க அனுமதி கொடுத்தார்கள். போலீஸ் நிலையம் அமைந்த பிறகு மீனவர்கள் அனுபவ பாத்தியத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அதிகாரிகள் கூறியிருந்தார்கள்.

இந்தநிலையில் ஒகி புயல் இயற்கை அழிவில் இருந்து மீனவ மக்களை பாதுகாக்க அந்த பகுதியில் சில குடிசைகள் அமைத்தபோது காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் தடுத்ததை மீனவ மக்கள் கண்டித்தனர். இதற்காக போலீஸ் நிலைய பகுதியை ஆக்கிரமித்தாக 300 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே கலெக்டர் தலையிட்டு, பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பிலும் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.


Next Story